Canada

பிரித்தானிய பாராளுமன்றத்தில் முதன் முதலாக நடாத்தப்பட்ட தை திருநாள் நிகழ்வு!

பிரித்தானிய பாராளுமன்றத்தில் முதன் முதலாக நடாத்தப்பட்ட தை திருநாள் நிகழ்வு!

பிரித்தானிய நாடாளுமன்றில் தைப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வானது பிரித்தானிய நாடாளுமன்ற ஜூபிலி அரங்கில் முதன்முறையாக நடைபெற்றது.


தைப்பொங்கல் விழாவினை தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் (APPG T) பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) இணைந்து ஒழுங்குபடுத்தியிருந்தது.

நிகழ்வானது அகவணக்கம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து, தமிழ் பாடசாலை சிறுவர்களின் பொங்கல் விழா உரை என்பவற்றுடன் ஆரம்பமானது.

அதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் தைத்திருநாள் விழா கொண்டாடப்படும் முறையையும் அதன் சிறப்பையும் உணர்த்தும் காணொளித் தொகுப்பு ஒன்று காண்பிக்கப்பட்டது. அரங்கம் நிறைந்த இந்த நிகழ்வில் தமிழ் பாடசாலைகள், கோயில்கள், மதகுருமார்கள், சமூக ஆர்வலர்கள் , பெண்கள், இளையோர்கள் மற்றும் அனைத்துக்கடசி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர். இவ் அரங்கம் தமிழ் மக்களின் செழுமையான கலாச்சர பாரம்பரியங்களை உணர்த்தும் வண்ணம் அலங்கரிக்கப்பட்டிருந்தது

பிரித்தானிய பிரதமர் Theresa May தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தது போல் பிரித்தானிய தமிழர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் அளப்பரிய பங்களிப்பினை ஆற்றி வருகின்றனர். எம் சாதனைகளையும், ஒரு புது வருட பிறப்பையும் வரவேற்று கொண்டாடும் இவ்வேளையில் இலங்கையின் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதையும் அவர்களின் அரசியல் அபிலாசைகளையும் பூர்த்தி செய்வதை உறுதிப்படுத்துவதற்கு எமது அர்ப்பணிப்பை புதுப்பித்துக்கொள்வோம்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழு (APPG T) தலைவர் Paul Scully MP அவர்கள் உரையாற்றும் பொழுது உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் இந்த நாளில் இலங்கை அரசு தேசிய இனப்பிரச்சனைக்கு சிறந்த அணுகுமுறைளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

வட அயர்லாந்துக்கான முன்னாள் அமைச்சர் Rt Hon Teresa Villiers MP அவர்கள் தமிழ் மக்களின் செழுமையான கலாச்சார பங்களிப்பினை பாராட்டியதுடன் தமிழ் மக்களின் நீதிக்கும் நிரந்தர சமாதானத்துக்குமான தேடலுக்கு தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார். பிரித்தானியாவில் உள்ள தமிழர்களுக்கு பாராட்டு தெரிவிப்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பமாக இந் நாள் அமைவதுடன், பிரித்தானிய நாட்டின் கலாச்சாரம், பொருளாதாரம், பொதுச் சேவைகள் போன்றவற்றிற்கான தமிழ் மக்களின் மிகப்பெரிய பங்களிப்புக்காக தனது நன்றியை தெரிவித்திருந்தார். நீதிக்கும் , நிரந்தர சமாதானத்துக்கும் , சரியான அரசியல் தீர்விற்கும் உங்கள் நண்பர்களாக குரல் கொடுப்போம். உங்களுக்கு பாராளுமன்றத்தில் மிகப்பெரிய அளவில் உறுதியான நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதையும், எனது தொகுதியிலும் பிரித்தானிய முழுவதிலும் உள்ள தமிழ் மக்களுடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமையடைகிறேன் எனவும் தெரிவித்திருந்தார்.

Rt.Hon. Stephen Timms MPஅவர்கள் உரையாற்றுகையில் East Ham பிரதான வீதியில் மட்டும் 114க்கு மேற்பட்ட வர்த்தக நிலையங்களுக்கு தமிழர்கள் உரிமையாளராக உள்ளதுடன் வருடா வருடம் அதிகரித்துவரும் தமிழர்களின் இந்த நாட்டிற்கான பொருளாதார பங்களிப்பினை பாராட்டினார். அத்துடன் பிரதான எதிர்க்கட்சி தலைவரும் தொழில் கட்சி தலைவருமான Rt.Hon. Jeremy Corbyn இந் நிகழ்விற்கு வழங்கிய சிறப்பு செய்தியினை வாசித்தார்.

” இந்த நாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அறுவடை தினத்தை தை பொங்கல் தினமாக கொண்டாடுகின்றனர். நன்றி தெரிவிப்பதற்கும், அன்புக்குரியவர்களுடன் ஒன்று சேர்வதற்கும் மற்றும் எதிர்காலத்துக்கான நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் தை பொங்கல் தினம் இடமளிக்கின்றது. பிரித்தானிய தமிழ் மக்கள் இந் நாடு முழுவதிலும் உள்ள சமூகங்கள் மத்தியில் முக்கியமான பங்களிப்பினை வழங்கி வருகின்றனர். பிரித்தானியாவின் பன்முகப்பட்ட தன்மை, சகிப்புத்தன்மை, மற்றும் உயிர்த் துடிப்பான பிரித்தானியாவுக்கு தமிழ் மக்கள் ஒரு முக்கியமான அங்கமாகும். இலங்கையில் மனித உரிமை போராட்டங்களுக்காக தமிழ் மக்கள் மிகப் பெரும் தியாகங்களை புரிந்துள்ளனர். இன்றும் கூட துன்புறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். இலங்கை சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் இலங்கை அரசு தமிழ் மக்களின் நீதிக்கும், நல்லிணக்கதிற்கும் சரியான நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்துவதில் எமது அரசாங்கம் தலைமை தாங்க வேண்டும்’’ என Rt.Hon. Jeremy Corbyn குறிப்பிட்டிருந்தார்.

Siobhain McDonagh MPஅவர்கள் தனது உரையில் நீதிக்காக உறுதி தளராது போராடும் தமிழ் மக்கள், உலகம் அவர்களின் உரிமையை ஏற்றுக்கொள்ள தொடர்ந்தும் பாடுபடுகின்றனர். தமிழ் மக்களின் நீதி, சமாதானம், விடுதலைக்கான போராடடத்தில் தமிழர்களுடன் ஒன்றாக கை கோர்ப்பதாக உறுதியளித்தார்.

Rt.Hon. Sir Ed Davey MP அவர்கள் சர்வதேச சுயாதீன விசாரணைகளுக்காகவும், இலங்கையில் நீதிக்கும், மனித உரிமைகளுக்காகவும் பிரித்தானியா வாழ் தமிழர்கள், உலகெங்கும் உள்ள தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களுடன் இணைந்து நாங்கள் பணியாற்ற விரும்புகின்றோம் என்பதை தெளிவாக குறிப்பிட விரும்புகின்றேன். தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி குழுவின் பிரதி தலைவர் என்ற முறையில் பிரித்தானிய தமிழர் பேரவையுடன் செயற்பட்டு வருகின்றேன். ஐ. நாடுகள் சபையில் சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றாத இலங்கை அரசுக்கு எமது அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும். இலங்கை அரசு தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களையும் நாம் அதிகரிக்க வேண்டும். ஆனால் அழுத்தங்கள் குறைக்கப்படுவதுடன் இலங்கை அரசுக்கு வெகுமதி அளிக்கப்படுவதனை நான் கவலையுடன் அவதானிக்கின்றேன். உதாரணமாக சர்வதேசத்துக்கான கடமைப்பாடுகளை நிறைவேற்றாத நிலையில் GSP+ போன்ற வர்த்தக சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலகெங்கும் உள்ள நண்பர்கள் அழுத்தங்கள் குறைக்கப்படாது என்ற தெளிவான செய்தியை வழங்க வேண்டும். அத்துடன் GSP+ சலுகையை இலங்கையில் இருந்து மீள பெறப்படவேண்டும் என்பதை நான் தனிப்பட்ட முறையில் விரும்புகின்றேன் என தெரிவித்திருந்தார்.

Mike Gapes MP அவர்கள் எமது நாட்டின் பல் இன கலாச்சாரங்களில் பிரித்தானியாவில் வாழும் தமிழ் சமூகத்தின் பங்களிப்பு அளப்பரியது. மேலும் தமிழர்கள் கல்விக்கு கொடுக்கும் முன்னுரிமை காரணமாக தமிழ் இளையோர்கள் கல்வியில் சிறந்த முறையில் விளங்குகின்றனர். நாம் ஒருபோதும் இலங்கையில் நடைபெற்ற கொடூரமான நிகழ்வினை மறக்கக் கூடாது. 2009லும் அதற்கு முன்பும் மரணித்தவர்களை நாம் என்றும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இப் பாராளுமன்றத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் தமிழ் மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும், இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உண்மையான நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்பவற்றை உருவாக்குவதுடன் சர்வதேச ரீதியாக அவர்களுக்கு நாம் என்ன செய்தோம், என்ன செய்து கொண்டிருக்கின்றோம் என்கின்ற நம்பிக்கையை கொடுப்பதற்குமான கடமை எம்மிடம் உள்ளது என தெரிவித்திருந்தார்.

Bob Blackman MP முதலில் உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் நீதியை பெற்றுக்கொள்வதையும், இலங்கையில் போர் குற்றம் இளைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அடுத்து தமிழ் மக்கள் தம் தாயகத்தில் தம் நிலத்தில் விவசாயம், மீன் பிடி தொழில் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்களையும் நாம் உறுதிப்படுத்த வேண்டும். உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்த பின் தமிழர்கள் நன்மை அடைவதை உறுதிப்படுத்த வேண்டும்

மேலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பிரித்தானியாவில் நடைபெறவுள்ள பொது நல வாய நாடுகளின் தலைவர்களுக்கான மாநாட்டில் தமிழ் மக்களும் நாம் அனைவரும் இணைந்து போராடும் விடயங்களை முன் கொண்டு வர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிகழ்விற்கு பழமை வாத கட்சிக்கான பிரித்தானிய தமிழர் (BTC), தொழில் கட்சிக்கான தமிழர் (TfL) மற்றும் லிபரல் டெமோகிராட்க்கான தமிழ் நண்பர்கள் (TfLibDem) இணை ஆதரவு வழங்கி இருந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top