News

புதிய அரசியலமைப்பை உருவாக்க தேசிய அரசு நீடிக்க வேண்டும்

கூட்டமைப்பின் நிலைப்பாடு இது என்கிறார் சுமந்திரன்

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு தொடரவேண்டுமாயின் தேசிய அரசாங்கம் நிலைத்திருப்பது அவசியம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார். எது நடந்தாலும் தேசிய அரசாங்கம் நீடித்திருக்கவேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இப்பொங்கல் நிகழ்வில் சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த எம்.ஏ.சுமந்திரன், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.

ஒரு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கத்தை உருவாக்கின. இதன் மூலமாகத்தான் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாகவிருந்தது. எனவே எது நடந்தாலும் தேசிய அரசாங்கம் நீடிக்க வேண்டும் என்பதே தங்களுடைய நோக்கமாகும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டார்.

“விசேடமாக புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயற்பாடு தொடரவேண்டுமாக இருந்தால் தேசிய அரசாங்கம் நிலைக்க வேண்டும்” என்றும் கூறினார்.

தேசிய அரசாங்கத்தில் உள்ள இரண்டு கட்சிகளும் சேர்ந்து பயணிப்பதற்கு எங்கள் ஆதரவைக் கொடுத்து வருகின்றோம். நாம் அவ்வாறு சொல்லுவதன் காரணமாக ஊழலை மறைத்து செயற்படுமாறு நாம் கூறவில்லை.

ஊழல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அதேநேரத்தில், இவ்வாறான விடயங்களால் தேசிய அரசாங்கத்தின் காலம் குறைந்துவிடக்கூடாது அல்லது முறிந்துவிடுவதை விரும்பவில்லை எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டில் நிரந்தர சமாதானம் ஏற்பட்டு இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் வலுப்பெறுவதற்கு 2018ஆம் ஆண்டு சிறந்த வருடமாக இருக்க வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top