புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் குத்த வந்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

விடுதலைப்புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் குத்த முயற்சித்த வயோதிபர் தெல்லிப்பளை மனநோய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் யாழ்.நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது குறித்த முதியவர் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரை மன்றில் முற்படுத்த முடியவில்லை என யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் மன்றுக்கு அறிக்கை முன்வைத்தார்.
இதனையடுத்து குறித்த சந்தேகநபரின் விளக்கமறியலை வரும் 30ஆம் திகதிவரை நீடித்து நீதிமன்று உத்தரவிட்டது. யாழ்ப்பாணத்தில் தனியார் தொலைக்காட்சி நிலையம் கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து விடுதலைப்புலிகளின் முன்னாள் பேச்சாளர் தயா மாஸ்டரை கத்தியால் வெட்ட முற்பட்ட போது சக பணியாளர்கள் அவரைக் காப்பாற்றினர். இதையடுத்து குறித்த முதியவரை பிடித்து பொலிஸில் ஒப்படைத்ததுடன், அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதேவேளை, குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று வாக்குமூலம் வழங்கியதாக அவரிடம் விசாரணை நடத்திய பொலிஸார் இதற்கு முன்னர் நடைபெற்ற வழக்கின் போது மன்றில் தெரிவித்திருந்தனர். “எனது மூளைக்குள் இரும்புத் தகட்டைச் சொருகி குறித்த தொலைக்காட்சி நிறுவனத்தினர் தன்னிடமுள்ள இரகசியங்களை பெற முயற்சித்தனர். என்னிடம் கைபேசியில்லை, எனது மூளைக்குள் மெமரிக்காட் உள்ளது. அதை தேவையான போது கைத்தொலைபேசியாக பயன்படுத்துவேன்”. என குறித்த நபர் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
20 வருடங்களுக்கு மேலாக ஐரோப்பிய நாடுகளில் பணியாற்றிவிட்டு நாடு திரும்பிய குறித்த நபர் தற்போது யாழ். பிரதான வீதியிலுள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகிறார்” எனவும் பொலிஸார் மன்றில் தெரிவித்திருந்தனர். இதையடுத்தே குறித்த நபரை தெல்லிப்பளை மனநோய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக இன்றைய வழக்கு விசாரணையின் போது மன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.