புலிகள் மீதான தடையை அரசாங்கம் நீக்க வேண்டும்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கூறியுள்ள நிலையில் புலிகள் மீதான தடையை தொடர்ந்தும் நீடிக்கத் தேவையில்லை என வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.
அத்துடன் விடுதலைப் புலிகள் மீதான தடையை இலங்கை அரசாங்கம் நீக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், புலிகள் ஏன் இன்னும் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருக்க வேண்டும்? அந்தத் தடையை அரசு நீக்க வேண்டுமென அங்கஜன் பகிரங்கமாக கோரிக்கை விடுக்க வேண்டும்.
புலிகள் என்ற போர்வையில் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக சிறையில் தடுத்து வைத்திருக்கும் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் நீதி கிடைக்க வேண்டும். ஏனெனில் அவர்கள் அரச படையினரிடம் தானே சரண் அடைந்தார்கள்.
புலிகளை தற்போது நீங்களும் அங்கீகரித்துள்ள நிலையில் அவர்களுக்கு நீதி கிடைக்க ஆவன செய்ய வேண்டும் எனக் கோருகின்றோம் என்றார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கருத்துக்களை தெரிவித்தார்.