பெரும்பான்மையினரை மையப்படுத்திய நகர்வு தோல்வியையே தரும்; சீ.வி.விக்னேஸ்வரன்

நமது நிலையறிந்து நடவடிக்ைககளில் நாம் இறங்க வேண்டும்
பெரும்பான்மையினரின் விருப்பு வெறுப்புக்களை மையமாக வைத்து காய்களை நகர்த்துவது தோல்வியையே தருமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மையினரின் நோக்கை மையமாகக் கொண்டு சிந்திக்கத் தொடங்கியதாலேயே தமிழ் மக்களின் உரிமைகளை வழங்க அவர்கள் முன்வரவில்லையென்றும் கூறியுள்ளார்.
ஊடகங்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்வியொன்றை தெரிவுசெய்து வாராவாரம் வடமாகாண முதலமைச்சர் பதில் வழங்கி வருகிறார்.
இதற்கமைய இந்த வாரத்துக்கான கேள்விக்கே அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். அடுத்த மாதம் 4ஆம் திகதி இலங்கையின் 70ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது.
இந்த 70 வருடங்களில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியாக முன்னெடுத்துவரும் போராட்டங்களால் கிடைத்துள்ள பலன் என்ன என்ற கேள்விக்கே அவர் பதில் வழங்கியுள்ளார். அவருடைய பதிலில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; பாண்டவர்கள் 14 ஆண்டுகள் உரிமையிழந்து இருந்தார்கள். அவர்களைப் போன்று ஐந்து மடங்கு வருடங்கள் (70 வருடங்கள்) உரிமைகளை இழந்து நாம் வாழ்ந்து வந்துள்ளோம். எமக்கான சுய நிர்ணய உரிமை இனியாவது எமக்குக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போமாக! உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எத்துறையில் நாம் பணியாற்றுகின்றோமோ அந்தத் துறையில் எம்மை நாம் வலுப்பெறப் பாடுபடுவோமாக! ஆகவே தீர்வு என்று கூறும்போது எமது நிலையறிந்து நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.
மனித உரிமைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையாளர் ஐ.நாவின் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் அடிப்படையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்யவேண்டிய பணிகளின் கால அட்டவணை ஒன்றைக் கேட்டிருந்தார். அதை நாம் அனுப்பி வைத்தோமோ நான் அறியேன்.
அதை அனுப்பி அரசாங்கத்திற்குக் காலக்கெடு விதித்தல் அவசியம். அரசாங்கம் எம்முடன் முறுகல் நிலையை அடையக் கூடும் என்று அப்பணியை உதாசீனம் செய்தால் எம்மையே அது பாதிக்கும். நெருக்குதல் இல்லாது எந்தச் சிங்கள அரசியல் தலைவரும் தமிழ் மக்களுக்கு எதையும் தரப்போவதில்லை. என்னுடைய ஐம்பது வருடத்திற்கு மேலான நெருங்கிய நண்பரும் தற்போது உறவினருமான வாசுதேவ நாணயக்கார கூட தரப்போவதில்லை. ஒரு காலத்தில் தமிழ் மக்களால் மிக நெருங்கிய நண்பராகப்போற்றப்பட்டவர் அவர். இப்பொழுது அவர் நிலைவேறு.அவரைக் குறை கூற முடியாது.
இன்றைய அரசியல் நிலை அப்படி. நாங்கள் எங்கள் குறிக்கோள்களில், கொள்கைகளில் இறுக்கமாக இருந்திருந்தால் சிங்கள மக்கள் தலைவர்கள் அதற்கேற்றவாறு நடந்திருப்பர்.
பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் என்பதால் நாமே பரிகாரத்தையும் தேடவேண்டும். எங்கள் பிரச்சினையை மையமாக வைக்காது பெரும்பான்மையினரின் விருப்பு வெறுப்புக்களை மையமாக வைத்து எமது காய்களை நகர்த்துவது தோல்வியையே தரும். அவர்கள் விருப்பு வெறுப்புக்கள் பிழையான அத்திவாரத்தில் கட்டப்பட்டவை என்பதை முதலில் நாங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆகவே அவர்களின் நோக்குப் பிழை என்பதை நாம் எடுத்துக்கூறி சர்வதேசம் அவர்களைக் கேள்வி கேட்கும் நிலையை நாம் ஏற்படுத்த வேண்டும். எமது உரிமைகளை, அதிகாரங்களை பறித்தெடுத்துவிட்டு எம்முடன் பேரம் பேசுபவர்களுக்கு நாம் உண்மையை எடுத்தியம்புவதில் எந்தப் பிழையும் இல்லை. இதன் நிமித்தம் எமக்கெதிராகப் பல சதி நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கக்கூடும். பதிலடிக்காக எம்மை மாண்பிழக்க வைக்கக்கூடும். அவற்றை ஏற்றே நாம் முன்னேற வேண்டும்.