News

பெரு: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 36 பேர் பலி

பெரு நாட்டின் தலைநகர் லீமா அருகே சுமார் 100 மீட்டர் ஆழ பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சுமார் 36 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரு நாட்டின் தலைநகரான லீமா நகருக்கு வடக்கு திசையில் சுமார் 70 கி.மி. தொலைவில் பசமாயோ என்னும் நகரம் அமைந்துள்ளது. இது கடற்கரை நகரமாகும். இப்பகுதிக்கு செல்லும் சாலைகள் மிகவும் ஆபத்தானவையாகும். சாலைகளை ஒட்டி சுமார் 100 மீட்டர் ஆழ பள்ளங்கள் உள்ளன.

இந்நிலையில், பசமாயோ நகரில் இருந்து ஒரு பேருந்து 57 பயணிகளுடன் லீமா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஒரு ஆபத்தான வளைவில் எதிரே வந்த மினி லாரி மீது மோதியது. இந்த விபத்தில் அந்த பேருந்து சாலையை ஒட்டி இருந்த சுமார் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த மீட்புப்படையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கப்போராடினர். ஆனால் பள்ளத்தில் இருந்து மக்களை மீட்பது கடினமாக இருந்ததால் ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணிகள் நடைபெற்றன. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த அனைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடைமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top