போருக்கு தயாராகும் வடகொரிய பொதுமக்கள்: வெளியான பகீர் தகவல்

வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் தலைமையில் அங்குள்ள பொதுமக்கள் போருக்கு எவ்வாறு தயாராகிறார்கள் என்ற பகீர் தகவல் வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா தொடர்பில் முன்னாள் தென் கொரிய ராணுவ தளபதி In-Bum Chun வெளியிட்டுள்ள கருத்துகள் உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
வடகொரியாவின் தலைமை பொறுப்பில் இருந்து கிம் ஜாங் உன்- ஐ பதவி நீக்கம் செய்வது என்பது, இஸ்லாமிய நாடுகளில் இருந்து மத நம்பிக்கையை நீக்குவதற்கு ஒப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவால் மிக எளிதாக ஈராக்கின் சதாம் உசைனை நீக்க முடிந்தது, ஆனால் கிம்-ஐ அவ்வாறு நீக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி கிம் ஜாங் குடும்பத்தினர் பொதுமக்களை மூளைச்சலவை செய்து போருக்கு ஆயத்தப்படுத்தி வைத்துள்ளதாகவும் அவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். வடகொரியாவில் 14 வயது சிறுவனுக்கு ஆண்டுக்கு 100 மணி நேரத்திற்கும் அதிகமாக ராணுவ பயிற்சி வழங்கப்படுவதாகவும் AK47 ரக துப்பாக்கிகளை பயன்படுத்தவும் தயார் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மட்டுமின்றி 5 முதல் 10 குடும்பத்தினர் கொண்ட குழுவில் எவரேனும் ஒருவர் தவறிழைத்தாலும், மொத்த குழுவினரும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவதாகவும், உச்சகட்டமாக மொத்த உறுப்பினர்களுக்கும் மரண தண்டனை வழங்கிய சம்பவங்களும் நடந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவில் சுமார் 5,000 டன் அளவுக்கு ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களுக்கான பொருட்கள் இருப்பதாகவும், சிறுவர்களை 12-ஆம் வயதில் இருந்தே இணையத்தில் ஊடுருவி தாக்கும் நிபுணர்களாக தயார்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி வடகொரியாவின் முக்கிய ஆயுதங்கள் அனைத்தும் பூமிக்கடியில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வல்லரசு நாடுகளின் தொழில்நுட்பங்களுக்கும் சிக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.