மகிந்தவின் அழைப்பை நிராகரித்த சம்பந்தன்!

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்காக பல வழிகளிலும் நாம் முயற்சித்தோம். அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவருவதற்கும் உத்தேசித்திருந்தோம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதயசுத்தியுடன் செயற்படாததாலேயே அந்த முயற்சிகள் கைகூடவில்லை. இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டியிலிருந்து தான் இன்னும் பின்வாங்கவில்லை என்றும், அரசியல் தீர்வை நோக்கிப் பயணிப்பதற்காகத் தன்னால் விடுக்கப்பட்ட அழைப்புகளை சம்பந்தன் நிராகரித்தே செயற்பட்டார் என்றும் மஹிந்த கூறியுள்ளார்.
இதேவேளை, தாமரை மொட்டு சின்னத்தில் தனது தலைமையின்கீழ் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாட்டின் அரசியல் சக்தியாக மாற்றமடையுமாக இருந்தால் தமிழர்கள் மட்டுமன்றி, சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்பொன்றை உருவாக்குவேன்.
புதிய அரசியலமைப்பொன்றை இந்த அரசு உருவாக்கினாலும் அனைத்து இன மக்களின் அங்கீகாரத்துடன் மட்டுமே அதனை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியின்போதே மேற்படி விடயங்களைத் தெரிவித்துள்ளார்.