‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’ வருமான வரித்துறை நோட்டீசுக்கு சசிகலா பதில்

‘மவுன விரதம் இருப்பதால் நேரில் ஆஜராக இயலாது’ என்று வருமான வரித்துறையின் நோட்டீசுக்கு சசிகலா பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் சசிகலா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு (2017) சோதனை நடத்தினர். தமிழ்நாடு முழுவதும் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. கணக்கில் வராத ஏராளமான சொத்து ஆவணங்கள், தங்க நகைகளை வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது.
இதுதொடர்பாக இளவரசியின் மகன் விவேக், மகள் கிருஷ்ணபிரியா, டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர் புகழேந்தி உள்ளிட்டோர் வருமான வரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தனர். இந்த சோதனையின் தொடர்ச்சியாக மீண்டும் சசிகலாவின் குடும்பத்தினருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் நேரில் ஆகுராகும்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். வருமான வரித்துறை அதிகாரிகளின் இந்த நோட்டீசுக்கு சசிகலா, சிறை நிர்வாகம் மூலம் பதில் கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த கடிதத்தில் அவர், ‘நான் பிப்ரவரி 10-ந் தேதி வரை மவுன விரதம் இருக்கிறேன். அதனால் என்னால் உங்கள் முன்னிலையில் ஆஜராக இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். விரதம் முடிந்த பிறகு நேரில் ஆஜராவது குறித்து தகவல் தெரிவிக்கிறேன்’ என்று குறிப்பிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.