News

மியான்மர் கலவரம்: போலீஸ் துப்பாக்கி சூட்டில் ரக்கினே புத்த மதத்தினர் 7 பேர் பலி

மியான்மரில் ஏற்பட்ட திடீர் கலவரத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ரக்கினேவில் உள்ள புத்த மத போராட்டக்காரர்கள் 7 பேர் உயிரிழந்தனர்.

புத்தமதத்தினர் பெரும்பான்மையாக வாழும் மியான்மர் நாட்டில் ரக்கினே மாநிலத்தில் சிறுபான்மை இனத்தவர்களான ரோகிங்கியா இன முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். இவர்களில் சிலர் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு போலீஸ் சோதனைச் சாவடிகள் மீது போராளிக் குழுவினர் தாக்குதல் நடத்தியதையடுத்து அவர்களை வேட்டையாடும் பணியை ராணுவம் தீவிரப்படுத்தியது. ரோகிங்கியா இன மக்கள் மீதும் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

இதனால் ரோகிங்கியா மக்கள் அகதிகளாக வங்கதேசம் சென்று தஞ்சம் புகுந்தனர். அவர்களில் 6 லட்சத்து 55 ஆயிரம் பேரை ரக்கினேவில் மறுகுடியமர்த்தும் பணியை தொடங்குவதற்காக மியான்மர் மற்றும் வங்கதேச அரசுகள் நேற்று ஒப்பந்தம் செய்துகொண்டன.

இது ஒருபுறமிருக்க, ரக்கினே பகுதியில் உள்ள புத்தமதத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒரு நிகழ்ச்சிக்காக நேற்று பழங்கால கோவில் வளாகத்தில் திரண்டனர். போராட்டக்காரர்கள் மாவட்ட நிர்வாக அலுவலகத்தைக் கைப்பற்றி அங்கு ரக்கியே மாநில கொடியை ஏற்றினர்.

அதைத் தொடர்ந்து அவர்கள் வன்முறையில் இறங்கினர். கல் வீச்சில் ஈடுபட்டனர்.

அவர்களை விரட்டியடிக்க பாதுகாப்பு படையினர் முயற்சித்தனர். ஆனால் அது பலன் அளிக்கவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கையாக அவர்கள் ரப்பர் குண்டுகளை வெடித்தனர். அதுவும் பலன் அளிக்கவில்லை.

அதைத் தொடர்ந்து அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் எடுத்தனர். அந்தப் பகுதியே போர்க்களம் போல மாறியது.
அப்போது அங்கு திடீரென வன்முறை ஏற்பட்டது. அவர்களை நோக்கி போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 7 பேர் உயிரிழந்தனர். 13  பேர் காயமடைந்தனர். போலீஸ் தரப்பிலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி போலீஸ் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “துப்பாக்கிச்சூடு நடந்த பகுதியில் இப்போது அமைதி நிலவுகிறது. நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது” என்று குறிப்பிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top