News

மைத்திரியின் வாள்வீச்சுக்கு இலக்காகும் பெருந்தலைகள் யாரென நாளை தெரியவரும்!

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு ஒருபோதும் மன்னிப்பே வழங்கப்படாது என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை திட்டவட்டமாக அறிவிக்கவுள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி அறிக்கை தொடர்பில் இன்று சட்டமா அதிபரிடம் பேச்சு நடத்தி விட்டு, தனது ஆலோசகர்களுடன் கலந்துரையாடி விட்டே நாளை அதிரடி முடிவை ஜனாதிபதி அறிவிக்கவுள்ளார் என அரச வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஜனாதிபதியின் மேற்படி அறிவிப்புத் தொடர்பில் கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களும் இராஜதந்திரிகளும் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக திறனாய்வு செய்ய கால அவகாசம் தேவைப்படுமென ஜனாதிபதி அலுவலகம் அறிவித்த நிலையில், நாளை ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

>சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய புள்ளிகள் பலர் அதில் சிக்கியிருப்பதாக நம்பகரமாக அறியமுடிகின்றது. முக்கிய தலைகள் சிக்கியிருப்பதால் இந்த விசாரணைக்குழுவின் அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு ஒப்படைத்து மோசடி செய்தவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையும் எடுக்க ஜனாதிபதி தீர்மானித்திருப்பதாகத் தெரியவருகின்றது.

அதற்கும் மேலாக, நீதியான விசாரணைகள் முடியும் வரை நிதித்துறையுடன் தொடர்புடைய முக்கிய அரச நிறுவகங்களை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவது குறித்து தனது ஆலோசகர்களுடன் நேற்று ஜனாதிபதி நீண்டநேரம் மந்திராலோசனை நடத்தியுள்ளார் எனவும் அறியமுடிந்தது. சர்ச்சைக்குரிய பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் விதமாக ஜனாதிபதி ஆணைக்குழு கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பிணைமுறியுடன் தொடர்புபட்ட மத்திய வங்கியின் பிரதானிகள், முதனிலை நிறுவனங்கள், அமைச்சர்கள், சமூக ஆர்வலர்கள் என மொத்தமாக 63 பேரிடம் ஆணைக்குழு விசாரணைகளை நடத்தியிருந்தது.

ஆரம்பத்தில் மூன்று மாதங்களுக்குள் விசாரணைகளை பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்திருந்த போதிலும் குறித்த பிணைமுறி ஏலத்தில் பல்வேறு அரச பிரதானிகள் சம்பந்தப்பட்டுள்ளமையால் விசாரணைக் காலத்தை நீடிக்க வேண்டுமென ஆணைக்குழு கோரிக்கை விடுத்திருந்தது. அதன்படி தொடர்ந்து நான்கு தடவைகள் கால நீடிப்பு வழங்கப்பட்ட ஆணைக்குழுவின் விசாரணைகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் சாட்சியப் பதிவுகளோடு நிறைவடைந்திருந்தது.

பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணைகளை செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக உயர்நீதிமன்ற நீதியரசர் கே.டீ.சித்திரசிறி, பி.எஸ்.ஜெயவர்தன மற்றும் ஓய்வுபெற்ற உதவிக் கணக்காய்வாளர் நாயகம், வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னிலையாகி விசாரணைகளுக்கு தலைமை தாங்கியிருந்தனர். அத்தோடு, அரச சட்டத்தரணிகள் சார்பில் சிரேஷ்ட மேலதிக சொலிசிற்றர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி டப்புல டி லிவேரா தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“ஊழலற்ற ஆட்சியை உதயமாக்குவதற்காக தனது வாள்வீச்சுப் பயணத்தில் சிக்கப்போவது யார் என்ற கவலை எனக்குக் கிடையாது. நண்பராக இருந்தாலும், உறவினராக இருந்தாலும் கட்சிப்பேதம் பாராது, தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார். எனவே, மத்திய வங்கி மோசடியுடன் தொடர்புடைய குற்றவாளிகளே வாள்வீச்சில் சிக்கும் முதலாவது நபர்களாக இருப்பர் எனக் கருதப்படுகின்றது. அதேவேளை, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்குரிய ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே ஜனாதிபதி ஆணைக்குழுவை மைத்திரி அமைத்திருந்தார். தற்போது குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்குரிய சமரை அவர் ஆரம்பிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பே நாளை வெளிவரும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top