“ரஜினிகாந்த் கட்சி பெயர் பொங்கல் அன்று அறிவிக்கப்படும்” அண்ணன் சத்யநாராயணராவ் பேட்டி

ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயரை, பொங்கல் அன்று அறிவிப்பார் என்று அவருடைய அண்ணன் சத்ய நாராயணராவ் கூறினார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். தனிக்கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அவர் கூறினார். இதுபற்றி பெங்களூருவில் உள்ள அவருடைய அண்ணன் சத்யநாராயணராவிடம் நிருபர்கள் கருத்து கேட்டார்கள். நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து சத்யநாராயணராவ் கூறியதாவது:-
“என் தம்பி ரஜினிகாந்த் எப்போதும் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும் என்பதில் விருப்பம் உள்ளவர். அவர் அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியிருக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்வார்.
ரஜினிகாந்தின் கட்சியின் பெயரை எல்லோரும் ஆவலுடன் கேட்கிறார்கள். பொங்கல் அன்று அவர் தனது கட்சியின் பெயரை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
அவருக்கு ஆயிரக்கணக்கில் ரசிகர் மன்றங்கள் உள்ளன. கிராமம் முதல் நகரம் வரை ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து, அவற்றை வலுப் படுத்த வேண்டியிருக்கிறது. தற்போது அதற்குத்தான் அவர் முன்னுரிமை கொடுத்து பணியாற்றி வருகிறார்”.
இவ்வாறு சத்யநாராயணராவ் கூறினார்.