ரணில் நாடகமாடுகிறார் : செல்கிறார் மஹிந்த

எனது ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கியில் ஊழல் இடம்பெற்றதா என ஆராய வலியுறுத்தப்பட்டுள்ளதே தவிர, நான் குற்றவாளி என அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை. சந்தேகம் இருக்கும் பட்சத்தில் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவேன் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவும் பதிலளிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ள நிலை யில் அது குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக் ஷ எம்.பி இதனைக் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
மத்திய வங்கி பிணைமுறி குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு தயாரித்துள்ள அறிக்கையில் எந்தவொரு இடத்திலும் எனது பெயர் சுட்டிக்காட்டப்படவில்லை. நான் மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளேன் என சுட்டிக்காட்டப்படவுமில்லை. எனினும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பெயர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர் மத்திய வங்கி விவகாரத்தில் தவறாக தீர்மானம் எடுத்துள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இருக்கையில் குறித்த குற்றச்சாட்டு குறித்து பொறுப்புக்கூற வேண்டும். தான் குற்றவாளி இல்லையெனின் அதனை அவர் நிருபிக்க வேண்டும்.அதற்காக அவர் கடந்த பாராளுமன்ற அமர்வில் உரை நிகழ்த்தினார். சிறுவர்கள் விளையாடுவதை போல அவர் பாராளுமன்றத்தில் கூச்சலிட்டு தனது உரையினை நிகழ்த்தினார்.
என்மீது குற்றம் சுமத்தப்பட்டு நான் விசாரணைக்கு அழைக்கப்பட்டு குறித்த காரணிகள் வினவப்பட்டால் அன்று நானும் பாராளுமன்றத்தில் எனது நிலைப்பாட்டை தெரிவிப்பேன். 2008- 2014 ஆண்டு காலப்பகுதியில் எனது ஆட்சியில் ஊழல் இடம்பெற்றது என்றால் அது குறித்து விசாரணைகளை நடத்தப்பட்டு கண்டறியப்பட வேண்டும். உண்மைகள் ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட வேண்டும். ஒருசிலர் கூறும் பழிக்கு நான் எதனையும் தெரிவிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ரணில் விக்கரமசிங்க என்ற நபரின் பெயர் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே அவர் கருத்துக்களை முன்வைக்க வேண்டும். எனினும் எனக்கு அவ்வாறான தேவை ஒன்று இல்லை. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது அரசியல் தேவைக்காக தன்னை காப்பற்றிக்கொள்ள நாடகமாடி வருகின்றார். நான் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்த அவர்களுக்கு முடியவில்லை என்பதால் பொய்யான குற்றங்களை சுமத்தி என்னையும் குற்றவாளியாக்க முயற்சித்து வருகின்றனர்.
எனது ஆட்சிக் காலத்தில் மத்திய வங்கியில் ஊழல் இடம்பெற்றுள்ளதா என்பது குறித்து ஆராய வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. மாறாக நான் திருடினேன் என கூறவில்லை. பிரதமர் கூறிய காரணங்கள் அறிக்கையில் இல்லை. இரண்டையும் தொடர்புபடுத்தி என்னையும் குற்றவாளியாக சித்தரிக்க முயற்சிக்கின்றனர். என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் குறித்து ஆராய நான் பூரணமாக அனுமதி வழங்குகின்றேன்.
எனது அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்த அனுமதி வழங்குகின்றேன். ஏனெனில் எனது அதிகாரிகள் மீது எனக்கு பூரண நம்பிக்கை உள்ளது. மேலும் பாரளுமன்றத்தில் குழப்பங்களை ஏற்படுத்த நாம் முயற்சிக்கவில்லை. அரசாங்கத்தில் இருந்துகொண்டு இவர்கள் நடந்துகொள்ளும் விதம் மிகவும் மோசமானது. எமது அணியின் சிரேஷ்ட உறுப்பினர் மீது அவர்களின் இளம் உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தினர். இது தந்தைக்கு மகன் தாக்குதல் நடத்துவதற்கு ஒப்பான செயலாகும். ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். என்றாலும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என்றார்.