India

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுதலை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு குறித்து மத்திய அரசு 3 மாதத்துக்குள் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. பின்னர் சாந்தன் உள்ளிட்ட 3 பேரின் தூக்கு தண்டனை 2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

அதற்கு அடுத்த நாளே அதாவது 2014-ம் ஆண்டு பிப்ரவரி 19-ந் தேதி அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். மேலும் 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு மனுதாக்கல் செய்தது. இதை ஏற்று தமிழக அரசின் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால தடை விதித்தது.

பின்னர் இந்த வழக்கை அப்போதையை தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. விசாரணையின் முடிவில் சி.பி.ஐ. விசாரணை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என 2015-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு அளித்தது.

இதையடுத்து முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க கோரி 2016-ம் ஆண்டு மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது. பின்னர் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை தமிழக அரசு நாடியது. இந்த வழக்கை ரஞ்சன் கோகாய், ஏ.எம்.சப்ரே, நவீன் சின்கா ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி வாதிடும் போது, மாநில அரசின் தீர்மானத்துக்கு மத்திய அரசு மதிப்பு அளிக்க வேண்டும் என்று கூறினார்.

முருகன் உள்ளிட்ட 7 பேர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரபு தன்னுடைய வாதத்தில், ராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதிகள் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை விடுவிக்குமாறு 2016-ம் ஆண்டு தமிழக அரசு அனுப்பிய கடிதத்துக்கு இதுவரை மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்திடம் இந்த விவகாரத்தில் முடிவை நீங்கள் தான் எடுக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் தமிழக அரசு உத்தரவு குறித்து 3 மாதத்துக்குள் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7 தமிழர்களை விடுதலை செய்யும் முடிவை எடுத்து அறிவித்தது தமிழக அரசு தான் என்பதால் அவர்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எனவே, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடுமையான அழுத்தம் கொடுத்து 7 தமிழர்களின் விடுதலைக்கு வழிவகுக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுபட்டிருக்கிறது என்பதை மத்திய அரசுக்கு தெரிவிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டி இதுகுறித்த தீர்மானத்தையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டுகோள் விடுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அடிப்படையாகக்கொண்டு தமிழக அரசின் அமைச்சர்கள் தலைமையில் குழுவினை அமைத்து 7 பேர் விடுதலை குறித்து பிரதமரிடம் நேரில் வலியுறுத்தி 7 பேர் விடுதலைக்கு துணை நிற்க வேண்டும் என கேட்டுக்கொள்ள வேண்டுகிறேன். 27 ஆண்டுகளாக சிறைபட்டிருக்கும் 7 பேரையும் இனியும் சிறையில் அடைத்து வைத்திருப்பது மனித உரிமைக்கு எதிரானது என்பதை வலியுறுத்திட வேண்டுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top