Canada

‘ரூபவாகினி’ சிறீலங்கா கனடா வருகைக்கு பலத்த எதிர்ப்பு!

அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான ‘ரூபவாகினி’ தொலைக்காட்சியினர் கனடாவுக்கு வருவதைத் தமிழ்த்தாய் மன்றம் மற்றும் மூதறிஞர் கந்தமுருகேசனார் பண்பாட்டு அமைப்பு ஆகியன வன்மையாக எதிர்க்கின்றன. இவ்விடையம் குறித்து கடந்த 31.12.2017 அன்று ரொரன்ரோவில் ஊடச் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இவ்வமைப்பின் பிரதிநிதிகள் ஊடகவிலயாளர்களைச் சந்தித்து தமது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அவ்வறிக்கை வருமாறு:

‘பௌத்த சிங்களப்பேரினவாத சிறீலங்கா அரசின் உத்தியோகபூர்வ ஊடகமான ‘ரூபவாகினி’ தொலைக்காட்சியினர் கனடாவுக்கு வருவதைத் தமிழ்த்தாய் மன்றம் வன்மையாக எதிர்க்கின்றது. இவ்விடயத்தில் ஒட்டுமொத்த கனடா வாழ் தமிழர்களின் உணர்வு வெளிப்பாட்டினை தமிழ்த்தாய் மன்றம் எதிரொலித்து நிற்கிறது எனலாம்.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழிப்புக்குத் துணைநின்றது மட்டுமல்லாமல் அந்த இன அழிப்பினை பயங்கரவாதத்துக் எதிரான போராக சித்தரித்து, எம்மக்களின் இழப்பினை, வலிகளை மூடி மறைத்து, பௌத்த சிங்களப் பேரினவாதத்துக்குத் தூபமிட்டு, அதன் இனவாத அரசியலுக்குத்துணை நின்று உலகின் கண்களிலிருந்து உண்மைக்குற்றவாளிகளை மூடிமறைத்ததன் மூலம் ரூபவாகினி தொலைக்காட்சி தமிழினப்படுகொலையில் பங்கெடுத்த பங்காளியும் ஆகிறது. எனவே இத்தொலைக்காட்சிக்கு எதிரான உணர்வை வெளிப்படுத்துவது எமது கடமை ஆகிறது.

தமிழர் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இவ்வாண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் தமிழர் தாயகமெங்கும் கடலெனத் திரண்ட மக்களால் மிகவும் சிறப்பாக நினைவுகூரப்பட்டுள்ளது. காணாமல் போனார் உறவுகள் தொடர்ந்து சுழல் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை நடத்தியபடியே உள்ளார்கள். அரசியல் கைதிகள், காணி ஆக்கிரமிப்பு இவற்றுக்கு எதிரான போராட்டங்களும் தொடர்ந்து நிகழ்ந்தபடியே உள்ளன. அந்நிகழ்வுகள் குறித்து மட்டும் கள்ள மௌனம் சாதித்தபடி இத்தனை ஆயிரம் மைல்கள் கடந்து கனடா வந்து பொங்கல் விழாவினைப் படம் பிடிப்பதானது இவர்களின் வருகைக்குப் பின்னால் இருக்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசியலின் நிகழ்ச்சி நிரலினை புடம்போட்டுக் காட்டுகிறது.

தமிழ் – சிங்கள நல்லிணக்கம் எனும் போர்வையில் இதன் உள்ளே ஒளிந்திருக்கும் அரசியல் ஆதாயம் குறித்துக் கனடா வாழ் தமிழ் உறவுகள் விழிப்படைய வேண்டும். இத்தகைய அரசியலுக்குத் துணைபோவதென்பது ஒத்தோடித்தனம். இவ் ஒத்தோடித்தனம் கண்டிக்கப்படவேண்டியது. ரூபவாகினி தொலைக்காட்சி ஒரு ஊடகமாகவே தமது பொங்கல் விழாவில் கலந்துகொள்கிறது என்று முதலில் சொன்னவர்கள் சிறீலங்கா அரசால் முன்மொழியப்பட்ட சாசன வரைவின் வெற்றிக்கு சகல இன மக்களின் ஒத்துழைப்பும் தேவையாகையால் நாடு தழுவிய பரப்புரைகள் அவசியம் எனப்பட்டதன் உணர்வே இந்த ரூபவாகினி விடயம் என்று இன்று தாங்களாகவே ஒத்துக்கொண்டார்கள். இது இன்று வெளிச்சத்துக்கு வந்துள்ள நிகழ்ச்சி நிரல்.

கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொள்ளும் கனடியத் தமிழர் பேரவை என்ற கனடியத் தமிழ் காங்கிரசு அமைப்பு சிங்கள அரச பயங்கரவாதத்தின் சதிவலையில் சிக்கிக்கொண்டதையே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்தியம்புகின்றன.

இதுவரை 400,000க்கும் அதிகமான அப்பாவித்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இறுதிப்போரில் மட்டும் 90, 000 தமிழ்ப்பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டனர். இந்த அரச பயங்கரவாதச் செயல்களை எல்லாம் மூடிமறைத்து பொய்யான தகவல்களை உலகுக்கு வழங்கிய அரச ஊதுகுழலான ரூபவாகினியின் கையில் படிந்துள்ளது எம் இனத்தின் இரத்தக் கறை.

இன அழிப்பின் பங்குதாரர்களாகிய ரூபவாகினி தொலைக்காட்சியின் கனடா வருகையை எதிர்க்காவிடின் எமது மக்களை இனவழிப்புச் செய்த கொடுங்கோலரசின் கொடுமைகளை நாம் ஏற்றுக்கொண்டவர்களாகிறோம்

ஆகவே 146, 000 தமிழர்களின் இறப்பை சிங்கள தேசத்தின் வெற்றியாகக் கொண்டாடிய இனவாத ஊடகமான ரூபவாகினியின் வருகையானது இவ்வின அழிப்பினைச்செய்து கொண்டாடிய மகிந்த, கோத்தபாய, சரத் பொன்சேகா போன்றவர்களின் வருகை போன்றதே.

சிறீலங்கா அரச பயங்கரவாதத்துக்குப் பலியான எமது அன்புக்கினிய மக்களுக்கான நீதிக்குக் குரல்கொடுப்போம்! தமிழீழ விடுதலைக்கு தமது விலைமதிப்பற்ற உயிர்களைக்கொடுத்த 60 000க்கும் மேற்பட்ட எம் மாவீரர்களின் உணர்வுகளுக்கு என்றும் உண்மையாக இருப்போம்! பௌத்த சிங்களப் பேரினவாத அடிவருடிகளின் கனவை தவிடுபொடியாக்குவோம்.’ என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top