News

விவாதம் திசை திருப்பப்படுவதை ஏற்க முடியாது

பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை கூடிய விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பான விவாதத்தை விரைவில் முன்னெடுக்காமல் இது திசை திருப்பப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று இடம்பெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் திறைசேரி பிணைமுறி விவகாரம் குறித்து கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை விரைவில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டது. இது விடயத்தில் எந்த முரண்பாடும் இல்லை.

ஆணைக்குழுவின் அறிக்கையானது கூடிய விரைவில் சமர்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உடன்படுகின்றோம்.

இதில் மாற்றுக் கருத்துக்கு இடம்கிடையாது. மக்களும் பாராளுமன்றமும் இந்த விடயத்தில் கொண்டுள்ள அக்கறையானது பாராளுமன்றத்திலான விவாதம் விரைந்தவொரு சந்தர்ப்பத்தில் எடுத்துக்கொள்ளப்படாமல் இருப்பதன் மூலம் இந்த விடயம் எந்த விதத்திலும் திசைதிருப்பப்படுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, இரு அறிக்கைகளும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு விடயங்களின் அடிப்படை வரை செல்ல வேண்டும்.

அது மட்டுமல்லாது, கடந்த காலத்திலும் அதேபோல், தற்போதும் இந்த நாட்டில் இழைக்கப்பட்ட அனைத்து ஊழல் மோசடிகள் தொடர்பிலும் விசாரிக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

இந்த அறிக்கையிலுள்ள உள்ளடக்கங்களையாவது வெளியிட்டமைக்காக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அரசாங்கத்துக்கும் பாராட்டுத் தெரிவிப்பதாகவும் கூறினார். விவாதத்தை தவிர்ப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக நாட்டு மக்கள் மத்தியில் அபிப்பிராயம் ஏற்படுத்தப்படக்கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top