
கொக்காவில் விபத்தில் பலியான நால்வரும் யாழ். இளைஞர்கள்! –
கொக்காவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் பெயர் விபரங்கள் வெளியாகி உள்ளன. யாழ் – அல்வாய் வடக்கு பகுதியைச் சேர்ந்த, 24 வயதான நவரத்தினம் அருண், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 36 வயதான சந்திரசேகரம் ஜெயசந்திரன், மாலு சந்தி பகுதியை சேர்ந்த 19 வயதான சிவசுப்பிரமணியம் சிந்துஜன் மற்றும் பருத்திதுறையை சேர்ந்த 19 வயதான சின்னத்துரை கிருஸ்ணரூபன் ஆகியோரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயதுடைய பி.துவாரகன் தொடர்ந்தும் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், விபத்தில் பலியானவர்களின் சடலம் பிரேதப் பரிசோதனையின் பின்னர், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாக பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று, சாரதியின் கட்டுப்பாட்டை மீறி, கோளறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதேவேளை, குறித்த ஹயஸ் ரக வாகன சாரதி மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்த விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.