அரசியல் ஒரு வருஷம் முடிஞ்சுபோச்சு முதல்வர் பதவியை எனக்கு தாங்க: டிடிவி தினகரன்

சென்னை: ஒரு வருடம் ஆகிவிட்டது. எனவே முதல்வர் பதவியை எனக்கு கொடுங்கள் என்று எடப்பாடியிடம் ஓபிஎஸ் சண்டை போடுவதாக டிடிவி.தினகரன் கூறினார். டிடிவி.தினகரன் நேற்று பகல் 12.10 மணிக்கு சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி பிரச்னைக்காக தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி தீர்மானங்கள் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது. இதேபோன்று தமிழக நலன் பிரச்னைக்காக அனைத்து கட்சிகளும் ஓரணியில் தொடர்ந்து செயல்பட வேண்டும். அதே நேரத்தில் தமிழக சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, இதை தீர்மானமாக நிறைவேற்றி விட்டு, அதன்பின்பு பிரதமரை சந்தித்தால் நன்றாக இருக்கும்.
இந்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு, சிலரை அழைக்காதது முதல்வர் எடப்பாடியின் சின்ன புத்தி. அவர் அரசியல்வாதியாக இருந்து, ஒரு பக்குவப்பட்ட அரசியல் தலைவராகி, இந்த பதவிக்கு வந்திருந்தால் இந்த சின்னபுத்தி வராது. அவர் திடீர் மசாலா போல், குருட்டு அதிர்ஷ்டத்தால் முதல்வரானவர். அவரிடம் இதற்கு மேல் எதுவும் எதிர்பார்க்க முடியாது. 90 சதவீத தொண்டர்கள், எங்களுடன் இருக்கின்றனர். மீதமுள்ளவர்களை நடவடிக்கை எடுத்து எங்கள் பக்கம் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் கொஞ்ச நாளில் அவர்களிடம் பன்னீர்செல்வம், எடப்பாடி உள்பட 6 பேர் மட்டுமே இருப்பார்கள். மற்ற அனைவரும் எங்களிடம் வந்து சேர்ந்து விடுவார்கள்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, எப்போதுமே என்னுடன் தொடர்பில் இருப்பவர்தான். இப்போது, 90 சதவீத ஆதரவுள்ள எங்கள் அணியில் அவர் இணைந்திருக்கிறார். பிரபுவை போல், மேலும் பலர் எங்களுடன் தொடர்பில் இருக்கின்றனர். பிரபு, சிலிப்பர் செல் அல்ல. சிலிப்பர்செல் வேறு பலர் இருக்கின்றனர். அவர்கள், இந்த ஆட்சிக்காக ஓட்டெடுப்பு நடக்கும்போதுதான் வெளிப்படுவார்கள். பன்னீர்செல்வம், முதல்வர் பதவி, தனக்கில்லை என்பதால்தான், ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்தார். தவம் செய்தார். தர்ம யுத்தத்தை நடத்தினார். அதன்பின்பு, மோடி கூறியதால் எடப்பாடி அணியில் இணைந்தார்.
எடப்பாடியும், அவரது ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வத்தை சேர்த்து கொண்டு, எடப்பாடிக்கு யார் முதல்வர் பதவி கொடுத்தார்களோ, எடப்பாடி ஆட்சி தொடர வேண்டும் என்று யாரெல்லாம் வாக்களித்தார்களோ அவர்களுக்கெல்லாம் துரோகம் செய்து விட்டு, இவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தார். பிரதமர் மோடி கூறிதான் பன்னீர்செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது எடப்பாடி முதல்வராகி ஓராண்டு ஆகி விட்டது. எனவே, ‘முதல்வர் பதவியை எனக்கு கொடுங்கள்’ என்று பன்னீர்செல்வம் கேட்கிறார். ஆனால் எடப்பாடியோ, ‘அதுபற்றி மோடி எதுவும் கூறவில்லை, எனவே முதல்வர் பதவியை விட்டு கொடுக்க மாட்டேன்’ என்கிறார். அந்த கோபத்தில்தான், பன்னீர்செல்வம் உண்மையை அவரை அறியாமலேயே பேசி ஒத்துக்கொண்டார்.இவ்வாறு அவர் கூறினார்.