இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டும் வரை அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதில்லை

தேசிய நல்லிணக்க அரசாங்கம் தொடர்வதில் எந்தவித பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. இனப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டும் வரை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கப் போவதில்லையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கம் தொடர வேண்டுமென்பதே தமது விருப்பம் என்றும், அவ்வாறு நடக்கும் என்பது தமது கையில் இல்லையென்றும் அவர் குறிப்பிட்டார். யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே சுமந்திரன் இதனைக் கூறினார்.
தேசிய அரசாங்கத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குமா என சிங்கள ஊடகங்கள் சம்பந்தனிடம் கேட்டிருந்தன. எவரும் கோரிக்கைவிடுக்கவில்லையென ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இது குறித்து சுமந்திரனிடம் கேட்டபோது,
“மாற்றங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இல்லை. யாராவது கோரிக்கை முன்வைத்தால் பரிசீலிக்காமல் முடிவுசெய்வது அநாகரீகமான செயலாகும். அவர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிச் சொல்லும்போது குழப்பத்திற்கு இடமளிக்கப்படக் கூடாது.
ஒரு அரசில் அங்கம் வகிப்பது, எமது பிரச்சினைத் தீர்வு எட்டும் வரையில் தவிர்க்கும் கொள்கையைக் கொண்டிருக்கின்றோம்” என்றார். தெற்கில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால், அரசியலமைப்பு உருவாக்கத்தினைப் பாதிக்கும் என்கின்ற கேள்விகள் எழுகின்றன, நிச்சயமாக பாதிக்கும்.
ஆனால், அதற்காக அனைத்தும் முடிந்துவிட்ட கதை என மூடிவைக்க முடியாது.
தொடர்ச்சியாக எமது முயற்சிகள் முன்னெடுக்கப்படும். ஆட்சி மாற்றத்திற்காகவே ஆதரித்து செயற்பட்டோம்.
போகும் வழியில் தடங்கல்கள் ஏற்படலாம். எல்லாம் சுமுகமாக நடக்குமென எதிர்பார்க்க முடியாது. தடங்கல்கள் ஏற்பட்டாலும், நாங்கள் அவற்றிற்கு முகம் கொடுப்போம். எழுகின்ற சூழ்நிலைக்கு முகம் கொடுப்போம் என்றார்.