ஈரானில் பயங்கர விபத்து மலையில் மோதி விமானம் நொறுங்கியது; 66 பேர் பலி

ஈரானில் உள்ள மலையில் மோதி பயணிகள் விமானம் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 66 பேர் பலியாகினர்.
ஈரான் நாட்டில் தலைநகர் டெக்ரானில் இருந்து, நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்து உள்ள யசூஜ் நகருக்கு ஏசெமன் விமான நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் நேற்று காலை டெக்ரானில் இருந்து ஏசெமன் நிறுவனத்தின் ஏடிஆர் 72-500 ரக விமானம் யசூஜ் நகரை நோக்கி புறப்பட்டு சென்றது.
அந்த விமானத்தில் 60 பயணிகள் இருந்தனர். 2 பாதுகாவலர்கள், 2 உதவியாளர்கள், ஒரு விமானி, ஒரு இணை விமானி என 6 பேர் சிப்பந்திகளாக பயணித்தனர்.
அந்த விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே, ரேடார் திரையில் இருந்து மறைந்தது. இதனால் அந்த விமானம் விபத்துக்கு உள்ளாகி இருக்க வேண்டும் என்ற அச்சம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது.
அதில் அந்த விமானம், மத்திய இஸ்பஹான் மாகாணத்தில் செமிரோம் நகரத்துக்கு அருகே தேனா மலையின் மீது மோதி நொறுங்கியது கண்டு பிடிக்கப்பட்டது. யசூஜ் நகருக்கு 185.2 கி.மீ. தொலைவில் இருந்தபோதுதான் இந்த விபத்து நேரிட்டு உள்ளது.
இந்த விமான விபத்துக்கு மோசமான வானிலைதான் காரணம் என முதல்கட்ட தகவல்கள் கூறுகின்றன.
விமான விபத்து குறித்து ஈரான் அவசரகால மருத்துவப் பணிகள் துறையின் இயக்குனர் பர் உசேன் கூலிவான்ட் கூறுகையில், “மத்திய இஷாபன் மாகாணத்தில் யசூஜ் நகரை சென்று அடைவதற்கு 185.2 கி.மீ. முன்னதாக விபத்து நேரிட்டு விட்டது” என்றார்.
விபத்து நடந்து உள்ள இடம், சென்று அடைவதற்கு கடினமான இடம் என்றும், அங்கு கடுமையான பனிமூட்டம் காணப்படுவதாலும், மழையும் பெய்து வருவதாலும் ஹெலிகாப்டர்கள் தரை இறங்குவது கடினம் என்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணம் செய்த பயணிகள் 60 பேர், சிப்பந்திகள் 6 பேர் என மொத்தம் இருந்த 66 பேரும் கூண்டோடு பலியாகி விட்டதாக அஞ்சப்படுகிறது.
இந்த விபத்து ஈரான் நாட்டில் பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்கு உள்ளான விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் விபத்து குறித்த கூடுதல் தகவல்களுக் காக காத்து இருக்கின்றனர்.