News

ஊழல் மோசடிக்கு எதிரான நடவடிக்கையை விரைவுபடுத்த குழுக்கள்

ஊழல் மற்றும் மோசடி தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விரைவுபடுத்த மூன்று அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சட்ட ஒழுங்கு அமைச்சர் எனும் வகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (26) காலை, சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து குறித்த குழு நியமிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவில், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, டி.எம். சுவாமிநாதன் மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் உறுப்பினர்களாகவும் சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன அக்குழுவுக்கு தலைவராகவும் செயற்படுவார் என பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர, குற்றம், நீதி தொடர்பான பல்கலைக்கழகமொன்றை நிறுவுவது தொடர்பிலான நடவடிக்கைகளை ஒன்றிணைக்கும் வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், அமைச்சர்களான தலதா அத்துகோரள மற்றும் சாகல ரத்நாயக்க ஆகிய அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் திணைக்களத்தில் இடம்பெறும் அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான முறையீடுகளை விரைவுபடுத்தும் வகையில் அமைச்சர்களான திலக் மாரப்பன, ரஞ்சித் மத்துமபண்டார, சாகல ரத்நாயக்க ஆகிய அமைச்சர்களைக் கொண்டு குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, போதைப்பொருள் சுற்றி வளைப்பு மற்றும் திட்டமிட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதோடு, குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

விசேடமாக, பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், பொலிசாரினால் தொடரப்படும் வழக்கு தொடர்பில் சாதகமற்ற முடிவுகள் கிடைக்கும் நிலையில் அது தொடர்பில் உடனடியாக மேன்முறையீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இக்கலந்துரையாடலில், நிதியமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க, சட்ட ஒழுங்கு அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன, சட்ட மா அதிபர் பூஜித ஜயசுந்தர, விசேட அதிரடிப் படையின் கட்டளையிடும் அதிகாரி எம்.ஆர். லத்தீப், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, நிதி மோசடி விசாரணை பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்யாலங்கார, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமாரச்சி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top