எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்பட மோடி கட்டாயப்படுத்தினார்: ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேச்சு

பிரதமர் மோடி கட்டாயத்தின் பேரில்தான் அதிமுகவில் சேர்ந்ததாகவும், எடப்பாடி அமைச்சரவையில் இணைந்ததாகவும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். முதல்வர் பதவியில் இருந்து தன்னை தூக்கியதால் ‘தர்மயுத்தம்’ என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவை உடைத்தார். பின்னர் எடப்பாடியுடன் சேர்ந்து சசிகலாவை வெளியேற்றினார். தற்போது எடப்பாடி அமைச்சரவையில் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். அதே நேரத்தில் கட்சியில் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். தற்போது ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவில் இணைந்தது குறித்து இதுவரை நேரடியாக எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தார். தற்போது அவர் பரபரப்பு தகவல்களை தேனியில் நடந்த கூட்டத்தில் வெளியிட்டுள்ளார். தேனியில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:
தமிழகத்தில் 2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் என்னை தோற்கடிக்க டி.டி.வி.தினகரன் குடும்பத்தினர் பலவழிகளில் முயற்சி செய்தனர்.
அதற்காக தங்கதமிழ்செல்வன் மூலம் சதித்திட்டம் தீட்டினர். அதை முறியடித்து வெற்றி பெற்றேன். கடந்த 2014ம் ஆண்டு சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்ததும், ஜெயலலிதா முதலில் என்னைத்தான் அழைத்தார். உடனடியாக முதல்வரை தேர்வு செய்யுங்கள் என்று என்னிடம் தான் கூறினார். அதன் பின்னர் அப்போதைய அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை அழைத்த அவர், ‘ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக தேர்ந்தெடுக்க வேண்டும். இதை அவரிடமே கூறினால் நன்றாக இருக்காது. அதனால் உங்களிடம் கூறுகிறேன். அவரை முதல்வராக தேர்ந்தெடுத்து அறிவியுங்கள்’ என்று கட்டளை இட்டார். இதனால் சசிகலா குடும்பத்தினர் எனக்கு பல்வேறு வகையில் மன உளைச்சலை தந்தனர். எனது இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், இந்நேரம் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எனக்கு சீட்டு தரக்கூடாது என சசிகலா தரப்பினர் முயற்சி செய்தனர். ஆனால், ஜெயலலிதா எனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கினார். நான் கோபப்பட்டால் நிறைய உண்மைகளை சொல்ல வேண்டியது வரும். அதனால்தான் பொறுமையாக இருக்கிறேன். தற்போது 3 கட்சி பெயர்களுடன், தினகரன் டெல்லியில் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்.அப்ேபாலோ மருத்துவமனையில் ஜெயலலிதா 78 நாட்கள் சிகிச்சையில் இருந்தார். 38வது நாள் நான், ஜெயலலிதாவை அமெரிக்கா அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று கூறினேன்.
அதற்கு, ‘எங்கள் மீது நம்பிக்கை இல்லையா? நாங்கள் நிச்சயம் அவரை குணப்படுத்தி விடுவோம்’ என்று அப்போலோ மருத்துவமனை நிர்வாகிகள் கூறி விட்டனர். நான் தர்மயுத்தம் நடத்தியபோது, பிரதமர் மோடியை சந்தித்தேன். ‘உங்களைப் பற்றி ஜெயலலிதா நல்லபடியாக சொல்லியுள்ளார். அதனால் நீங்கள் அதிமுகவுடன் இணைந்து செயல்படுங்கள்’ என அவர் ஆலோசனை வழங்கினார். இணைந்து செயல்படுகிறேன். ஆனால் அமைச்சர் பதவி வேண்டாம் என்று அவரிடம் கூறினேன். இல்லை. நீங்கள் கட்டாயம் அமைச்சராக வேண்டும்’ என்று மோடி என்னிடம் கட்டாயப்படுத்தினார். மோடியின் கட்டாயத்தின் பேரில், அதிமுகவில் இணைந்தேன். ஜெயலலிதா என்னை 2 முறை முதல்வராக ஆக்கினார். முதல்வர் பதவியைப் பார்த்தவன், அமைச்சர் பதவியை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன் என்றார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது மோடியின் கட்டாயத்தின் பேரில் சேர்ந்ததாக கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.