News

ஐநா மனித உரிமைகள் கழகத்தின் 37வது கூட்டத் தொடரில் எதிர்நோக்கும் சவால்கள்!

2009ல் இருந்து 2015வரை புலம் பெயர் அமைப்புக்கள், மற்றும் வெளிநாடுகளின் பெரும் முயற்சியினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழகத்தில் இலங்கை தொடர்பான மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தது. ஜனவரி 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வந்ததும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் மனித உரிமைகள் முன்னேற்றம் குறித்து இலங்கை அரசு, சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயற்படுவதாகக் காட்டிக் கொண்டது.

இந்தக் கட்டத்தில் 2015ம் ஆண்டு செப்டம்பர் கூட்டத்தொடரில் இலங்கை அரசும் இணைந்து ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானத்தில் இலங்கை அரசு விரும்பாத பல அம்சங்கள் புலம் பெயர் அமைப்புக்களாளும் சர்வதேச நாடுகளின் பலத்தினாலும் அதிலே உள் இணைக்கப்பட்டது. இலங்கை அரசு அதனைப் புறம் தள்ள முடியாத சூழ்நிலையில் இதற்கு இணை அனுசரணை வழங்கியது. அதிலே இருபத்தி ஐந்து நிறைவேற்றப்பட வேண்டிய அம்சங்கள் உள்ளன. நிறைவேற்றப்பட வேண்டிய அந்த கடப்பாடுகளில் ஒன்றையாவது இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளக் கூடிய குறைந்தபட்ச அளவு கூட நிறைவேற்றவில்லை.

அந்தத் தீர்மானம் கொண்டு வரும்போதே “கால அட்டவணையுடன்” இதை நிறைவேற்றக்கூடியவாறு இருக்க வேண்டுமென பிரித்தானியத் தமிழர் பேரவையும் அதன் சகோதர அமைப்புகளும் வலியுறுத்திய போதும் அன்று அது சர்வதேச நாடுகளினால் உள்வாங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து இலங்கை அரசு 2015 தீர்மானத்திலுள்ள கடப்பாடுகளை நிறைவேற்றவில்லை, நிறைவேற்றப் போவதுமில்லை என்பதை ஆதாரங்களுடன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம்.

செப்டெம்பர் 2015 தீர்மானமானது ஒன்றரை ஆண்டுகளின் பின்னர் மார்ச் 2017இல் நிறைவுக்கு வரும் கால எல்லை வந்தவுடன் அடுத்த கட்டமாக ஒரு கால நீடிப்பை வழங்க சர்வதேச நாடுகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமை கழகத்தினூடாக தீர்மானமொன்றை முன்வைத்தது. தொடர்சியாக கால நீடிப்பை கொடுத்துக் கொண்டிருக்கும் போது அதை இலங்கை அரசாங்கம் காலம் கடத்தும் வேலையாக பார்க்குமே தவிர தன் கடப்பாடுகளை முழுமனதாக நிறைவேற்றப் போவதில்லை, என்பதனை வலியுறுத்தி பல விதமான வடிவங்களில் இதனை நிரூபிக்கும் பல ஆதாரங்களை தொடர்ச்சியாக வழங்கி வந்தோம்.

இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டுமாயின் தீர்மானத்தில் குறிப்பிட்ட அனைத்து அம்சங்களையும் நிறைவேற்றுவதற்கு “கால அட்டவணையுடன் கூடிய ஒரு செயல்திட்டமொன்றை” ஸ்ரீலங்கா அரசு உடனடியாக முன் வைக்க வேண்டும் என்று கோரினோம். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை ஆணையாளர் செய்ட் தன்னுடைய மார்ச் 2017 அறிக்கையில் கால அட்டவணையுடன் கூடிய ஒரு நிகழ்ச்சித்திட்டம் இலங்கை கையளிக்க வேண்டும் என்று அதனை தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். நாம் சொல்வதிலுள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ள கூடிய நிலையில் பல நாடுகள் இருந்தும் கூட அங்கிருந்த நாடுகளின் வலுச் சமநிலையின் அடிப்படையில் ஐ நா மனித உரிமைக் கழகமானது மார்ச் 2017 தீர்மானத்தில் காலத்தை இரண்டு வருடங்களுக்கு நீடித்ததே தவிர நாம் முன்வைத்த அடுத்த கட்டத்திற்கு செல்லவில்லை.

ஆயினும் விடாமல் நாம் செய்த தகவல் பரிமாற்றங்கள் காரணமாக மேலும் பல நாடுகள் எங்கள் கோரிக்கைகளை புரிந்து கொண்டனர். தொடர்ச்சியாக எம்மால் வலியுறுத்தப்பட்டு வந்த “கால அட்டவணை செயல்திட்டம்” 2017 ஜூன் மாத கூட்டத் தொடரில் ஐ நாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் இலங்கை இல்லாத போதிலும் பிரித்தானியா, இலங்கை அரசு கால அட்டவணையுடனான நிகழ்ச்சி நிரலை வழங்க வேண்டுமென்று தனது நிலைப்பாடாக வலியுறுத்தியது. 2017 செப்டெம்பர் மாத கூட்டத் தொடரில் மேலும் பல நாடுகள் அதற்குச் சார்பாக இணைந்து கொண்டனர். 2017 நவம்பர் மாதத்தில் நடந்த ஸ்ரீலங்காவிற்கான Universal Periodic Review (U.P.R) இலே மேலும் பல நாடுகள் அதற்கு சார்பாக குரல் கொடுத்தனர்.

இப்போது “கால அட்டவணையுடன் கூடிய செயல் திட்டமொன்றினை” முன்வைக்க வேண்டுமெனும் கோரிக்கைக்கு சார்பாக பிரித்தானிய தமிழர் பேரவை பல நாடுகளை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கின்றது. 26 பெப்ரவரி அன்று ஆரம்பமாகிய மார்ச் மாத கூட்டத்தொடரில் முழு வீச்சாக மேற்படி கோரிக்கைக்கான ஆதரவு தேடும் நடவடிக்கைகளில் பிரித்தானிய தமிழர் பேரவை ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஆரம்ப கட்ட வேலைகள் வெற்றி அளித்தால் இலங்கை அரசு கால அட்டவணையை சமர்ப்பிக்க வேண்டிய நிர்பந்தத்திற்குள் தள்ளப்படும். பின்னர் குறிப்பிட்ட காலத்துக்குள் இதை நிறைவேற்ற வேண்டிய நிலைக்கும் தள்ளப்படும். அப்போது அனைவரும் சிறிலங்காவின் செயல்பாடுகளைக் கண்காணிப்பார்கள்.

அதற்கூடாக இலங்கை அரசு தீர்மானத்தில் ஏற்றுக் கொண்ட அனைத்துக் கடப்பாடுகளையும் நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்துக்குள்ளாக்கப்படும். அது நிறைவேற்றப்படாத பட்சத்தில் சர்வதேசத்திற்கு பாரதூரமான இடைவெளி சுட்டிக் காட்டப்பட்டு உலகளாவிய நியாயாதிக்கம் (Universal Jurisdiction) அடிப்படையிலான முன்னெடுப்புகள் உள்பட இலங்கைக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புகளுடன் இணைந்து முன்னெடுக்கும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top