News

ஒப்படைத்தவர்களைக் கொன்று விட்டீர்களா? – ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பும் அனந்தி

காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப்பார்த்தோம் காணவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். அவ்வாறாயின், உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டவர்களைக் கொன்றுவிட்டீர்களா, அப்படியாயின் கொலைக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதையும் பகிரங்கமாக கூறவேண்டும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டு பேசும் போது, காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிப் பார்த்தோம் காணவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை மாபெரும் இனப்படுகொலை குற்றத்தை சர்வசாதாரணமான பதிலுரைப்பின் மூலம் மூடி மறைக்கும் எத்தனிப்பாகவே அமைந்துள்ளது.

போர் முடிவின் இறுதி காலகட்டத்தில் எமது உறவுகளை எங்களது கைகளால் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தோம். இது உலகறிந்த உண்மையாகும். அவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்கள் ஓரிருவர் அல்ல ஆயிரக்கணக்கிலான உறவுகளை கையளித்திருந்தோம். சுய நினைவாற்றலுடன் நல்ல தேக ஆரோக்கியமான நிலையில் முழு மனிதர்களாக எங்களால் உங்கள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் உறவுகள் எங்கே? அவர்களுக்கு என்ன நடந்தது?

வெளிப்படையாகவே ஆணித்தரமாக அவர்களில் எவரும் இல்லை என்று மைத்திரிபால சிறிசேன கூறுகின்றார் என்றால் ஒன்றில், தொடர்ந்தும் சட்டவிரோத தடுப்பு முகாம்களில் இரகசியமாக தடுத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையென்றால் உயிரோடு இல்லாது போயிருக்க வேண்டும். அவ்வாறு உயிரோடு இல்லாது போயிருந்தால் பலாத்காரமாகவே அவர்களது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கும்.

இவ்வாறுதான் நடந்திருக்குமென்றால், எமது உறவுகளை கையேற்ற இலங்கை இராணுவத்தினர், அவர்களை இரகசிய தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருந்தவர்கள், அவ்வாறு அடைத்து வைக்க உத்தரவிட்டவர்கள், அடைத்து வைக்கப்பட்டிருந்தவர்களை படுகொலை செய்தவர்கள், படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டவர்கள் என அனைவர் குறித்தும் மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அறிவிப்பு செய்ய வேண்டும்.

தத்தமது பிராந்திய நலன்களுக்கு இசைவாகச் செயற்பட்டுவரும் இந்த நல்லாட்சி அரசாங்கத்துடன் தமிழர் தரப்பாகிய எம்மை இணங்கிப் போகுமாறு போதிக்கும் அனைத்துலக நாடுகள் இதற்கு பொறுப்பேற்றேயாக வேண்டும். நாங்கள் எழுப்பும் தார்மீக கேள்விகளை அனைத்துலக நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கை அரசாங்கத்தை நோக்கி எழுப்பியே ஆகவேண்டும்.

இலங்கையில் இரகசிய சித்திரவதை முகாம்கள் இருப்பதையும் அதில் தமிழர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் சர்வதேச மனித உரிமை பிரதிநிதிகள் ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்கள்.இதனை முன்னாள் ஜனாதிபதியும், இச்சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடைய ஆட்சிக்காலத்தில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தலைவராகவும் விளங்கிய மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டிருந்தார்.

அவ்வாறு இரகசிய சித்திரவதை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள் குறித்த பட்டியலை வெளியிடுவதாகவும் மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மன்றத்தில் வாக்குறுதியளித்திருந்தார். 2015 ஜனவரி 08 இற்கு முன்னர் இருந்த இரகசிய சித்திரவதை முகாம்கள் வேண்டுமானால் இன்று இல்லாது போயிருக்கலாம். ஆனால் அவற்றில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட தமிழர்கள் எவ்வாறு இல்லாமல் போனார்கள்? இதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கமே முழுப்பொறுப்பேற்க வேண்டும்.

பிராந்திய நலன்களுக்குள், மனித உரிமைச் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளை ஆழப்புதைத்துவிட்டு அந்த கல்லறை மீது வைக்கும் ரோஜா பூவாக அனுதாப அறிக்கைகளையும், நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறன், நீ அழுவது போல பாசாங்கு செய் என்ற ரீதியில் இலங்கை அரசாங்கத்தின் மீதான கண்துடைப்பு அழுத்தங்களையும் வழங்கிவரும் போக்கினை அனைத்துல நாடுகள் தொடர்வதே இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறல் விடயத்தில் பொறுப்பற்றதனமாக செயற்பட்டு வருவதற்கு காரணமாகும்.

ஆகவே, சம்பந்தப்பட்ட இலங்கை மற்றும் அனைத்துலக சமூகம் இப்போக்கினை கைவிட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் மற்றும் இனப்படுகொலை அகியவற்றுக்கான உரிய நீதியை வழங்குவதுக்கு முன்வர வேண்டும்.

இத்தருணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரிற்கு நீதி கேட்டு போராடிவரும் எமது உறவுகளிடம் மிகத்தாழ்மையாக கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும். இன்றும் உயிரோடுதான் இருப்பார்களேயானால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைவாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லவே இல்லை என்றால் அதற்கு காரணமானவர்கள் சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும்.

இவ்விடயத்தில் உங்களுக்கும் மாற்றுக் கருத்து இருக்காது என்று திடமாக நம்புகின்றேன். நாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரிந்து நின்று தனித்தனியே இனியும் போராட்டங்களைத் தொடர்வோமாயின் தேடினோம் கிடைக்கவில்லை என்று கூறியதைப் போன்ற அலட்சியமான பதிலுரைப்புகள் மூலம் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் கைகழுவிவிடப்படும். அனைத்துலகமும் தனக்கென்ன என்ற போக்கில் வாழாதிருக்கும்.

பிரதேச, அரசியல் மற்றும் நான் பெரிது நீ பெரிது என்ற தன்முனைப்பு நிலை கடந்து, பாதிக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட சமூகமாக நாம் ஒன்றிணைந்து ஒரே அணியாகி ஒன்றுபட்ட சக்தியாக நாம் நீதிக்கான போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே எமது உறவுகளுக்கு உரிய நீதியைப் பெற்றுக்கொள்ள முடியும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top