கனடாவின் மூன்று குழந்தைகள் மருத்துவமனைகள் அவசர பாதுகாப்பு கட்டுப்பாட்டிற்குள்!

ரொறொன்ரோ நோயுற்ற சிறுவர் வைத்தியசாலை ஞாயிற்றுகிழமை இரவு பூராகவும் அவசர பாதுகாப்பு கட்டுப்பாட்டிற்குள் உட்படுத்தப்பட்டதால் மிகவும் கடுமையான சூழ்நிலை ஏற்பட்டது.
ஜெராட் வீதி மேற்கு மற்றும் யுனிவேசிட்டி அவெனியுவில் அமைந்திருக்கும் சிறுவர் வைத்தியசாலைக்கு ஞாயிற்றுகிழமை இரவு 10.30மணியளவில் பொலிசார் அழைக்கப்பட்டனர்.
துப்பாக்கி ஏந்திய அதிகாரிகள் அப்பகுதியில் மணித்தியாலக்கணக்கில் காணப்பட்டனர். வைத்தியசாலையின் அவசர மருத்துவ சேவை பிரிவின் வாயில்களும் மூடப்பட்டன. பொலிசார் வைத்தியசாலைக்குள் நுழைந்தனரா என்பது தெளிவாகவில்லை.
இதே நேரம் கல்கரியில் அல்பேர்ட்டா சிறுவர் வைத்தியசாலையும் பாதுகாப்பு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருந்துள்ளது. தந்திரோபாய பொலிஸ் அலகு தேடுதலில் ஈடுபட்டனர் என கூறப்பட்டது.
இரு சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையனவா என்பது தெரியவில்லை. ஏறக்குறைய இதே சமயத்தில் எட்மன்டனிலும் வைத்தியசாலை ஒன்று பாதுகாப்பு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருந்துள்ளது.
இது குறித்து ரொறொன்ரோ பொலிசார் கல்கரி மற்றும் எட்மன்டன் பொலிசாருடன் தொடர்பு கொண்டுள்ளனர். மூன்று சம்பவங்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டனவா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.