கனடாவில் ரயில்வே தண்டவாளங்களை சேதப்படுத்தியவர் கைது .

கனடாவில் ரயில்வே பாதை தண்டவாளத்தை சேதப்படுத்தியதாக நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். டொரண்டோவில் உள்ள ராயல் யார்க் சுரங்க ரயில் நிலையத்துக்கு கடந்த வெள்ளிகிழமை வந்த நபர் அங்குள்ள பத்து தண்டவாளங்களை சேதப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக சிக்னல் கோளாறுகள் ஏற்பட்ட நிலையில் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு ரயில்வே ஊழியர்கள் வந்து பிரச்சனையை சரி செய்த பின்னரே ரயில்கள் ஓட தொடங்கியது. இதையடுத்து தண்டவாளங்களை சேதப்படுத்திய பவில் குரோட்கோஸ்கி (48) என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சில கருவிகளை வைத்து பவில், தண்டவாளங்களை சேதப்படுத்தியிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதோடு குயின்ஸ்வேயில் உள்ள ஒரு வேலிப்பகுதிக்குள் கடந்த மாதம் 7-ஆம் திகதி நுழைந்து விமான நிலையத்தின் பெக்கான் மின்சக்தித் துறையை பவில் சோதனையிட்டார் என்ற குற்றச்சாட்டு அவர் மீது ஏற்கனவே உள்ளதால் அது தொடர்பான வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.