News

கோத்தாபய கடற்படைமுகாம்’ முன் முள்ளிவாய்க்கால் மக்கள் ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்படையின் தேவைக்காக மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு அளவீடு செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியுள்ளதுடன், நில அளவையாளர்களை விரட்டியடித்து, வட்டுவாகல் பாலத்தை 2 மணித்தியாலங்கள் மூடியும் தமது எதிர்ப்பை காட்டினர். முள்ளிவாய்க்கால், வட்டுவாகல் பாலத்தை அண்மித்த பகுதியில் சுமார் 670 ஏக்கர் மக்களுடைய நிலத்தில் கடற்படையினர் ‘கோத்தாபாய கடற்படைமுகாம்’ என்னும் பெயரில் பாரிய கடற்படை முகாமை அமைந்துள்ளனர்.

இக் காணியை பெற்றுத்தருமாறு மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் அந்த கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை. எனினும் காணியை சுவீகரித்து கடற்படையினருக்கு நிரந்தரமாக வழங்க 4 தடவைகள் சுவீகரிப்பிற்காக காணி அளவீடு செய்ய முயற்சிக்கப்பட்டது.

4 தடவையும் மக்களும் அரசியல்வாதிகளும் இணைந்து எதிர்ப்பை காட்டியதாவல் அளவீட்டு நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. இதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் 5ஆவது முறையாக சுவீகரிப்பிற்காக காணி அளவீடு செய்ய முயற்சிக்கப்பட்டது. இந்த முயற்சியை எதிர்த்து நேற்றுக் காலை 7.30 மணி தொடக்கம் போராட்டம் மதியம் 1.30 மணிவரையில் நடத்தப்பட்டது.

காலை 9 மணிக்கு நில அளவையாளர்கள் முள்ளிவாய்க்கால் கோட்டபாய கடற்படைமுகாம் வாசலுக்கு வந்தார்கள். இதன்போது நில அளவையாளர்களின் வாகனத்தை சூழ்ந்து கொண்டு மக்கள் எங்களுடைய காணியை எங்களுடைய ஒப்புதல் இல்லாமல் எப்படி அளக்க முடியும் என கேள்வி எழுப்பியதுடன் அங்கிருந்து வெளியேறுமாறு கூறினர். எனினும் தமக்கு மேல் இடத்திலிருந்து உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், காணியை அளக்கவேண்டும் எனவும் நில அளவையாளர்கள் கூறினர். இதனால் நில அளவையாளர்களுக்கும் பொதுமக்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் மூண்டது. இதனையடுத்து தமது உயர் அதிகாரிகள் வருகிறார்கள் அவர்களுடன் பேசுங்கள் என கூறியதை தொடர்ந்து மக்கள் அமைதியடைந்தனர். எனினும் நில அளவையாளர்கள் அந்த இடத் திலேயே நின்று கொண்டிருந்தார்கள்.

கோபமடைந்த மக்கள் நில அளவையாளர்களை விரட்டியடித்தனர்.

தமது உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள் என நில அளவையாளர்கள் கூறிய போதும் அவ்வாறு நில அளவையாளர்கள் எவரும் சம்பவ இடத்திற்கு வந்திருக்கவில்லை. இதனையடுத்து கோபமடைந்த மக்கள் நில அளவையாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கடுமையாக கூறினர்.

இதனால் இது தரப்பினருக்குமிடையில் வாய்த்தர்க்கம் மூண்ட நிலையில் நில அளவை திணைக்களத்தின் வாகனத்தின் பக்க கண்ணாடியை உடைத்து எறிந்த சிவாஜிலிங்கம் வாகனத்தின் கதவுகளை அடித்து சாத்தி உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு கூறினார். மக்கள் நில அளவையாளர்களை பிடித்து தள்ளி உடனடியாக அங்கிருந்து வெளியேறும்படி கூறிய நிலையில் சற்று நேரம் அங்கே பதற்றம் நிலவியது.

காலை 9.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்தனர். பொலிஸார் வருவதை அவதானித்த மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் பொலிஸாரின் வாகத்திற்கு முன்னால்போய் நின்றார். அவரை தொடர்ந்து மக்களும் பொலிஸாரின் வாகனத்தை வழிமறித்தார்கள். இதனையடுத்து பொலிஸாரை அங்கிருந்து வெளியேறுமாறு மக்கள் கோசங்களை எழுப்பினர். இதனால் பொலிஸார் பின்வாங்கினர்.

பின்னர் அங்கிருந்து பொலிஸாரை வெளியேற மக்கள் அனுமதித்த நிலையில் பொலிஸார் போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து சற்று தள்ளிபோய் நின்றனர்.

அரசாங்க அதிபர் இந்த விடயம் தொடர்பாக பிரதேச செயலருடன் பேசிவிட்டு மீண்டும் அழைப்பை எடுப்பதாக கூறினார் என பிரணவ நாதன் மக்களுக்கு கூறினார்.

சற்று நேரத்தில் உதவி அரசாங்க அதிபரை தொலைபேசியில் அழைத்த அரசாங்க அதிபர் சிறிது நேரம் பேசினார். பின்னர் மக்களுடன் பேசிய உதவி அரசாங்க அதிபர் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் மேற்படி காணி அளவீட்டு நடவடிக்கையை எதிர்வரும் 26ம் திகதி வரை நிறுத்துங்கள் என கூறி மாவட்ட நில அளவை திணை க்களத்திற்கு எழுதிய கடிதம் ஒன்றின் பிரதியை வழங்கலாம் என கூறினார். இதற்கு மக்கள் இணங்கினர்.

இதற்குள் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் கேட்டதற்கு இணங்க மக்கள் போராட்டம் நடைபெற்ற இடத்தில் பந்தல் அமைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட உதவி அரசாங்க அதிபர் சுமார் 15 நிமிடங்களின் பின்னர் பிரதேச செயலருடைய கடிதத்துடன் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தார்.

அந்த கடிதத்தை மக்கள் சார்பில் மாகாணசபை உறுப்பினர்களான து.ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டதை தொடர்ந்து போராட்டம் நிறைவுக்கு வந்தது.

பின்னர் வட்டுவாகலில் இருந்து ஊர்வலமாக மாவட்ட நில அளவை திணைக்களத்திற்கு சென்ற மக்களும் அரசியல்வாதிகளும் மக்களுடைய ஒப்புதல் இல்லாமல் காணியை அளவீடு செய்ய முயற்சித்தமை பிழையான நடவடிக்கை என சுட்டிக்காட்டினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top