சசிகலா குடும்பத்தினருக்கு நெருங்கியவரின் ரூ.380 கோடி பினாமி சொத்துகள் பறிமுதல்? வருமான வரித்துறை அதிரடி

சென்னை: சசிகலா குடும்பத்தினரின் நெருங்கியவருக்குச்சொந்தமான 380 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். இது டிடிவி தினகரன் வட்டாரத்தில் அதிர்வலைகளை உருவாக்கி உள்ளது. ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்புடைய வீடுகள், நிறுவனங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ஆய்வு செய்தனர். அப்போது ஜெயலலிதா, சசிகலா பெயரில் ஏராளமான பினாமி நிறுவனங்கள் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் திநகரில் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பை முகவரியாக கொண்டு பல்வேறு நிறுவனங்கள் செயல்பட்டன. இவற்றில் பல நிறுவனங்கள் பெயருக்கு மட்டுமே செயல்பட்டன. பண பரிவர்த்தனை, சொத்துகள் வாங்குவது போன்ற பணிகளை மட்டுமே இவை செய்தன. வருமான வரி தாக்கல் செய்யவில்லை. கறுப்பு பணத்தை கணக்கு காட்டவே இந்த நிறுவனங்கள் தொடங்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டன. அதனையடுத்து இந்த போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்த வருமான வரித்துறை நிறுவனம் அவற்றின் சொத்துகளை முடக்கியது. வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.அதன் தொடர்ச்சியாக சென்னை எம்ஆர்சி நகரில் ஆதி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 380 கோடி ரூபாய் மதிப்புள்ள 4.3 ஏக்கர் ஃபிர்ஹெவன் எஸ்டேட்டை முடக்கியது. இந்த எஸ்டேட்டை 2015ம் ஆண்டு ஆதி நிறுவனம் வாங்கிய போது இந்த மதிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
அதுவும் ரியல் எஸ்டேட் துறை முடங்கியிருந்த போது இவ்வளவு பெரிய மதிப்பில் சொத்து வாங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் குஜராத்தை சேர்ந்த சுனில் கெட்பாலியா, மனீஷ் பார்மர் ஆகியோருக்கு சொந்தமானது. ஏற்கனவே நடைப்பெற்ற விசாரணைகளில் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் வங்கி கணக்கில் இருந்த 70 கோடி ரூபாய் ஏற்கனவே முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆதி நிறுவனம் பெரிய வணிக பரிமாற்றங்கள் ஏதும் செய்ததில்லை. ஆனால் கோடிக்கணக்கில் பணத்தை ைகயாண்டுள்ளது. ஆதி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு மொரிஷியஸ் நாட்டில் உள்ள பசிட்டோலோஸ் இன்வெஸ்ட்மென்ட் லிட் என்ற நிறுவனத்திடமிருந்து 250 கோடி ரூபாய் அந்நிய செலாவணியாக வந்துள்ளது. இந்த நிதியை பயன்படுத்திதான் சென்னையில் விலை உயர்ந்த சொத்துகளை இந்த நிறுவனம் வாங்கி குவித்துள்ளது.
இதே போல் சுனில் கெட்பாலியா இயக்குநராக இருக்கும் எடிசன் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இதில் 30 கோடி ரூபாயை முதலீடு செய்திருந்தது தெரியவந்தது. இந்த எடிசன் நிறுவனத்தில் இன்னொரு இயக்குநர் அதிமுகவின் முக்கியத் தலைவருக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சசிகலாவை மறைமுகமாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுனிலும், மனீஷும் சேர்ந்து 2015ம் ஆண்டு பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் லேண்ட்மார்க் குழுமத்தின் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை மேற்கொண்டனர். ஆரம்பத்தில் இதுபோன்ற திட்டங்களுக்கு நிதி உதவி செய்து வந்தனர். பின்னர் மொத்தமாக அவர்களே வாங்கி விற்க ஆரம்பித்தனர்.இப்படி மனீஷ் பார்மர் 12க்கும் அதிகமான போலி நிறுவனங்களை நடத்தி கறுப்பு பணத்தை கணக்கில் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டு வந்ததையும் வருமான வரித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதேபோல் சுனில் கெட்பாலியாவுக்கு முன்னாள் அமைச்சர்கள் உட்பட பல்வேறு அதிமுக பிரமுகர்களுடன் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்ததுள்ளது. அதுமட்டுமல்ல அதிமுக பிரமுகர்களுக்காக பல்வேறு வேலைகளை செய்யும் தரகராகவும் சுனில் இருந்துள்ளார்.
அதிமுக 2011ல் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பு வரை சுனில் சிறிய அளவில் வட்டிக்கு நிதி உதவி செய்பவராகதான் இருந்துள்ளார். அதிமுக பிரமுகர்கள் மற்றும் சசிகலாவின் உறவினர்களுக்கு பினாமியாக இருந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். அந்த அறிமுகத்தை பயன்படுத்தி இவரே தனி பினாமியாக மாறியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.சசிகலா உறவினர்கள் மற்றும் பினாமிகளை கண்டறிந்து வருமான வரித்துறை அதிகாரிகள் சொத்துகளை முடக்கும் நடவடிக்கைகளை தொடங்கியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.