India

சட்டசபையில் ஜெயலலிதா படம் இன்று திறப்பு : திமுக, காங்கிரஸ் புறக்கணிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் இன்று திறக்கப்படுகிறது. ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை திறக்கக் கூடாது என்று திமுக, காங்கிரஸ் கூறி திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. மேலும் தேமுதிக, பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் படத் திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து சட்டசபையில் ஜெயலலிதாவின் படம் வைக்கப்படும் என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சட்டசபையில் ஜெயலலிதா படம் வைக்க திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இருந்தபோதிலும் ஜெயலலிதாவின் படத்தை வைப்பதற்கான பணிகள் வேகமாக நடந்து வந்தன.
சட்டசபையில் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் படங்கள் 7 அடி உயரமும், 5 அடி அகலமும் கொண்டது. அதே போல், ஜெயலலிதாவின் முழு உருவ படமும் வரையப்பட்டுள்ளது. சட்டசபையில் 6 பாகங்கள் உள்ளன. இதில் முதலாவது பாகத்துக்கும், இரண்டாவது பாகத்துக்கும் இடையே பின் பக்கத்தில் இடைவெளி ஏற்படுத்தி அதில் ெஜயலலிதா படம் வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஜெயலலிதா படத்தை திறந்து வைக்குமாறு பிரதமர் நரேந்திரமோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை. இதைத் தொடர்ந்து ஜெயலலிதா படம் 12ம் தேதி (இன்று) திறக்கப்படும் என்று சட்டமன்ற பேரவை செயலாளர் பூபதி அறிவித்திருந்தார்.
அதன்படி, ெஜயலலிதா படம் திறப்பு விழா இன்று காலை 9.30 மணிக்கு, தலைமை செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் நடக்கிறது. விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முன்னிலை வகிக்கிறார். சபாநாயகர் ப.தனபால் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்கிறார். விழாவில் பங்கேற்குமாறு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை திறக்கக்கூடாது என்று திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதனால், இன்று நடைபெறும் படத்திறப்பு விழாவில் பங்கேற்க போவதில்லை என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசரும் படத்திறப்பு விழாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார். மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் படத்திறப்பு விழாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் நேற்று பேரவை செயலாளர் பூபதியை சந்தித்து மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top