சர்ச்சைக்குரிய பிரியங்கவின் குடும்பமும் சர்ச்சையில்!!!

பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவின் குடும்பத்தாரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என உலக தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
உலகத் தமிழர் பேரவையின் சார்பில் பிரித்தானிய உட்துறை அமைச்சர் ஆம்பர் ரூத்திற்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அக் கடிதத்தில்,
பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டமைக்கு உலகத் தமிழர் பேரவையினர் குறித்த கடிதத்தின் மூலம் நன்றியும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரித்தானியாவிலுள்ள பிரிகேடியரின் குடும்பத்தாரின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு அவர்களையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறும், பிரிகேடியருக்கான இராஜதந்திர உரிமையின் அடிப்படையிலேயே அவரது குடும்பத்தினர் பிரித்தானியாவிற்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் உலகத் தமிழர் பேரவையினர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக கடந்த 4ஆம் திகதி புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கழுத்தை அறுப்பதைபோன்று சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்கவை இலங்கை அரசாங்கம் திருப்பியழைத்து விசாரணை நடத்த வேண்டுமென பிரித்தானிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழர் அமைப்புகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலர் வலியுறுத்தியிருந்தனர்.