சிரியாவில் ரஷியா நடத்திய குண்டு வீச்சில் 30 தீவிரவாதிகள் பலி

போர் விமானம் சுட்டு வீழ்த்தியதற்கு பழி தீர்க்கும் வகையில் சிரியாவில் உள்ள தீவிரவாதிகள் முகாம்கள் மீது ரஷியா இராணுவம் குண்டு வீசி நடத்திய தாக்குதலில் 30 தீவிரவாதிகள் பலியாகினர்.
உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அதிபர் பசார் அல்- ஆசாத் அரசுக்கு ஆதரவாக ரஷிய ராணுவம் களம் இறங்கியுள்ளது. இந்த நிலையில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில் நேற்று முன்தினம் ரஷிய போர் விமானங்கள் குண்டு வீசியது.
அப்போது ரஷியாவின் ‘சுகோய்-25’ ரக போர் விமானம் சராகிப் என்ற இடத்தில் ஜப்ஹாத் அல்-நுஸ்ரா தீவிரவாதிகள் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தினர். அதில் இருந்து பாராசூட் மூலம் கீழே குதித்து தப்பிய விமானியையும் கொன்றனர்.
இதற்கு பழி தீர்க்கும் வகையில் தீவிரவாதிகளின் நிலைகள், இருப்பிடங்கள் மற்றும் பதுங்கும் குழிகள் மீது ரஷிய போர் விமானங்கள் நேற்று சரமாரி குண்டு வீசி தாக்குதல் நடத்தின.
அதில் 30 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகளின் பதுங்கு குழிகள், மறைவிடங்கள் அழிக்கப்பட்டன. இந்த தகவலை ரஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.