ஜெயலலிதாவின் 70வது பிறந்தநாளை கொண்டாடும் அதிமுக .

:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினரால் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் ஜெயலலிதாவின் படங்கள் அலங்கரித்து வைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகின்றன.
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி அம்மா ஸ்கூட்டர் திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. முதற்கட்டமாக கலைவாணர் அரங்கத்தில் தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் மானியம் வழங்குகிறார்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா சிலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். இதேபோல் அ.தி.மு.க. மாவட்ட, கிளை அலுவலகங்கள், பிற மாநிலங்களில் உள்ள அ.தி.மு.க. அமைப்புகள் சார்பிலும் ஜெயலலிதா பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இதேபோல் டிடிவி தினகரன் அணியினரும் ஜெயலலிதாவின் பிறந்தநாளை மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
சுகாதாரத்துறையால் அரசு மருத்துவமனைகள் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் மூலம் தமிழ்நாடு முழுவதும் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. 28-ம் தேதி வரை 700 சிறப்பு மருத்துவ முகாம்களும், 24ம் தேதி முதல் மார்ச் 6-ம் தேதி வரை 700 சிறப்பு தாய்சேய் நல மருத்துவ முகாம்கள் என மொத்தம் 1400 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.