India

ஜெயலலிதாவுக்கு வெண்கல சிலை பிறந்த நாளான 24–ந் தேதி திறக்கப்படுகிறது

மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வெண்கல சிலை, அவரது பிறந்த நாளான இம்மாதம் 24–ந் தேதி திறக்கப்படுகிறது.

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் வெண்கல சிலை, அவரது பிறந்த நாளான இம்மாதம் 24–ந் தேதி திறக்கப்படுகிறது.

தமிழகத்தின் முதல்–அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்து வந்த ஜெயலலிதா கடந்த 2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந் தேதி உடல்நலக் குறைவால் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிசம்பர் மாதம் 5–ந் தேதி அவர் மரணமடைந்தார்.

ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு பின்புறம் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து, அதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியது. ஆனால், அது தொடர்பான வழக்கு ஒன்று கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால் நினைவு மண்டபம் அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு வெண்கலத்தில் சிலை அமைக்க கட்சித் தலைமை முடிவு செய்தது. ஏற்கனவே, அங்கு அ.தி.மு.க. நிறுவனரும், மறைந்த முன்னாள் முதல்–அமைச்சருமான எம்.ஜி.ஆருக்கு 7 அடி உயரத்தில் வெண்கல சிலை உள்ளது.

அந்த சிலைக்கு வலதுபுறத்தில், ஜெயலலிதாவுக்கும் அதே உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. எம்.ஜி.ஆர். சிலையை சுற்றி இருந்த கம்பி வேலிகள் அகற்றப்பட்டு, மாலை அணிவிப்பதற்கு வசதியாக போடப்பட்டிருந்த படிக்கட்டுகளுடனான மேடையும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

அடுத்தக்கட்டமாக, சிலை வைப்பதற்கான பீடம் அமைக்கும் பணி தொடங்க இருக்கிறது. இந்த பணிகள் ஒரு பக்கம் நடந்தாலும், மற்றொரு பக்கம் ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்கும் பணியும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

திருவள்ளூர் மாவட்ட எல்லை முடிவடையும் இடத்தில், ஆந்திர மாநில எல்லையில் ஸ்தபதி ஒருவர் ஜெயலலிதாவின் 7 அடி உயர வெண்கல சிலையை தத்ரூபமாக வடிவமைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்த சிலையை அடுத்த வார இறுதியில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு எடுத்துவந்து அங்குள்ள பீடத்தில் நிறுவப்பட உள்ளது.

இம்மாதம் 24–ந் தேதி (சனிக்கிழமை) ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று, சிலை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்–அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்–அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் வெண்கல சிலையை திறந்துவைப்பார்கள் என தெரிகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top