India

ஜெயலலிதா மர்ம மரணம் ஆணையம் சார்பில் சசிகலாவிடம் 2,956 பக்கங்கள் கொண்ட ஆவணம் அளிப்பு

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்த விசாரணை ஆணையம் சார்பில் 2,956 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் சசிகலாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் இதுவரை 30க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அவர்களில், பெரும்பாலானோர் சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 21ம் தேதி நீதிபதி ஆறுமுகச்சாமி, சசிகலாவுக்கு சம்மன் அனுப்பினார்.

அதன்பேரில், கடந்த ஜனவரி 5, 12ம் தேதி சசிகலா தரப்பு வழக்கறிஞர் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘’சசிகலாவுக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார். இந்த மனு மீது கடந்த ஜனவரி 30ம் தேதி நீதிபதி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில், சசிகலா 7 நாட்களுக்குள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். இன்றிலிருந்து 15 நாட்களுக்குள் சாட்சியம் அளித்தவர்களிடம் குறுக்கு விசாரணை செய்யலாம்’’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் பிப்ரவரி 6ம் ேததி சசிகலா வழக்கறிஞர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சாட்சியம் அளித்த 22 பேர் விவரங்கள் மட்டும் போதாது. அவர்கள் அளித்த ஆவணங்களையும் தர வேண்டும். ஆவணங்கள் தருவதிலிருந்து 10 நாட்களுக்குள் சசிகலா பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்வார். ஆணையம் அனைவரிடமும் விசாரணையை முடித்து விட்டு 7 நாட்கள் அவகாசம் தர வேண்டும்.

அதன் பிறகு குறுக்கு விசாரணை செய்கிறோம்’’ என்று அந்த மனுவில் கூறியிருந்தார். இந்நிலையில், சசிகலா மனு மீது பிப்ரவரி 12ம் தேதி நீதிபதி ஆறுமுகச்சாமி விசாரணை நடத்தினார். அப்போது, சசிகலா தரப்பில் வழக்கறிஞர் ராஜாசெந்தூர்பாண்டியன் ஆஜரானார். அவர், விசாரணை ஆணையத்தில் ஆஜரான 22 சாட்சியங்கள் அளித்த ஆவணங்களை தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை நீதிபதி ஏற்று கொண்டார். இந்த விசாரணையில் 4 சாட்சிகள் தாக்கல் செய்த 16 ஆவணங்கள் அளிக்கப்பட்டது. மேலும், 18 சாட்சிகள் அளித்த 450 ஆவணங்களை தரப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். இதை தொடர்ந்து பிப்ரவரி 26ம் தேதி பிரமாண வாக்குமூலத்தை சசிகலா தரப்பில் தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் உறுதியளித்தார். ஆனால், விசாரணை ஆணையம் சார்பில் ஆவணங்கள் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று காலை 11 மணியளவில் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் விசாரணை ஆணையத்திற்கு வந்தார். அப்போது விசாரணை ஆணைய செயலாளர் கோமளாவை சந்தித்து ஆவணங்களை தருவது குறித்து மீண்டும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து 2,956 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியனிடம் ஆணையம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆவணங்களை பெறுவதற்கு சசிகலா தரப்பில் ரூ.7200 கட்டணமாக செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து சசிகலா தரப்பில் வழக்கறிஞர் பிரமாண வாக்கு மூலம் தாக்கல் செய்ய 15 நாட்கள் கால அவகாசம் கேட்டு விசாரணை ஆணைய செயலாளரிடம் மனு அளித்தனர்.

பின்னர் சசிகலா வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆணையத்தில் சாட்சியங்கள் அளித்த வாக்குமூலங்களை ஆவணங்களாக தர நீதிபதி உத்தரவிட்டார். அப்போது எங்களுக்கு ஒரு சில சாட்சியங்களின் ஆவணங்கள் தரப்பட்டது. 302 புகார்கள், 142 மனுக்கள், 28 பிரமாண பத்திரங்கள் தரப்படும் என்று தெரிவித்தார். இந்த ஆவணங்களை தர ரூ.7200 கட்டணமும் செலுத்தினோம். ஆனால், ஆவணங்கள் எங்களுக்கு தரவில்லை. விசாரணை ஆணையத்தில் மீண்டும் புதிய மனுவை தாக்கல் செய்தோம். அந்த மனுவில், ஆவணங்கள் கொடுத்த 15 நாட்களில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்வதாக கால அவகாசம் கேட்டோம். 15 நாள் கால அவகாசம் கொடுக்கும் பட்சத்தில், சசிகலா தரப்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்படும்.

ஆணையத்தில் சாட்சியங்கள் அனைத்தும் தரவில்லை. சில சாட்சியங்களை மீண்டும் விசாரிக்க வேண்டியிருப்பதால் அந்த சாட்சியங்களின் ஆவணங்களை தரவில்லை’ என்றார். விசாரணை தள்ளி வைப்பு: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையத்தில் இன்று ஜெ கார் ஓட்டுனர் கண்ணன், நாளை இளவரசி மகன் விவேக், மார்ச் 2ம் தேதி போயஸ்கார்டன் சமையல்காரர் சேகர் ஆகியோரிடம் நீதிபதி விசாரணை நடத்த திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில், நீதிபதி ஆறுமுகச்சாமி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக 3 நாட்களில் நடக்கவிருந்த விசாரணை தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக விசாரணை ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. மீண்டும் 6ம் தேதி முதல் விசாரணை நடைபெறுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top