India

ஜெயலலிதா மர்ம மரண விசாரணை ஆணைய செயலாளர் திடீர் மாற்றம் : அரசியல் பிரஷர் காரணமா?

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த 2016 செப்டம்பர் 22ம்தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ெதாடர்ந்து, 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் டிசம்பர் 5ம் தேதி அவர் திடீரென மரணம் அடைந்தார். இந்த மரணம் தொடர்பாக நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று, கடந்த செப்டம்பர் 25ம் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இந்த ஆணையத்தின் தலைவராக ஆறுமுகசாமி, செயலாளராக சட்ட துறை துணை செயலாளர் பன்னீர்செல்வம் உட்பட 15க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டனர்.

இந்த ஆணையம் சார்பில் முதற்கட்டமாக ஜெயலலிதா சிகிச்சை விவரங்கள் மற்றும் வேறு ஏதேனும் ஆதாரங்கள் இருந்தால் ஆணையத்திடம் தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டது. இதையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார்கள் பெறுவதும், ஆணையத்தின் விசாரணைக்கு ஆஜராக வேண்டியவர்களுக்கு சம்மன் அனுப்பும் பணியையும் விசாரணை ஆணைய செயலாளர் பன்னீர்செல்வம் செய்து வந்தார். தொடர்ந்து, ஆணையத்தின் தலைவர் ஆறுமுகசாமி கோவையில் இருப்பதால், ஆணையத்தின் செயல்பாடுகள் முழுவதும் பன்னீர்செல்வம் கவனித்து வந்தார்.

இந்நிலையில், ஆணையம் தொடங்கி 6 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில், விசாரணை ஆணைய செயலாளர் பன்னீர்செல்வம் அந்த பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக சட்டத் துறை துணை செயலாளர் கோமளா புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து இதுவரை 27 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து, இன்னும் பலரிடம் விசாரணை நடத்த வேண்டி உள்ளது. விசாரணை ஆணையத்தின் தொடர் நடவடிக்கைகள் குறித்தும், எப்போது செயல்படும் என்ற சில விவரங்களை பன்னீர்ெசல்வம் ஊடகங்களுக்கு தெரிவித்து வந்தார். இந்நிலையில், திடீரென விசாரணை ஆணைய செயலாளர் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செயலாளர் குறித்து பரபரப்பு பின்னணி:

விசாரணை கமிஷன் செயலாளராக நியமிக்கப்பட்ட கோமளாவின் கணவர் ஆர்.வி.பாபு. இவர், அதிமுக வக்கீல் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். ஐகோர்ட் அரசு வக்கீலாக அவர் பணிபுரிந்து வந்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் மனோஜ் பாண்டியனுக்கு மிகவும் நெருக்கமானவர். இந்த நிலையில் ஜெயலலிதா மரணத்தை விசாரிக்க தமிழக அரசு கமிஷன் அமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதே அதன் செயலாளராக கோமாளா விருப்பம் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கமிஷன் செயலாளராக கோமளா நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top