India

டிஎன்ஏ பரிசோதனை நடத்துவதற்காக ஜெயலலிதாவின் உயிரி மாதிரிகள் உள்ளனவா?

ஜெயலலிதா தனது அம்மாதான் என்றும், அவரது உடலுக்கு தனது குல வழக்கப்படி மரியாதை செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரியும் பெங்களூருவை சேர்ந்த அம்ருதா தொடர்ந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனைக்காக ஜெயலலிதாவின் உயிரி மாதிரிகள் உள்ளனவா என்பது குறித்து பதில் தருமாறு அப்போலோ மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு வைஷ்ணவ முறைப்படி இறுதி சடங்கு செய்வதற்காக தன்னிடம் உடலை ஒப்படைக்கக்கோரி, ஜெயலலிதாவின் மகள் என உரிமை கோரும் பெங்களூருவை சேர்ந்த எஸ்.அம்ருதா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், இருவருக்கும் இடையே உள்ள ரத்த சம்பந்தம் குறித்து டி.என்.ஏ. பரிசோதனை செய்யாமல் உடலை ஒப்படைப்பது சரியாக இருக்காது என தெரிவித்தார். டி.என்.ஏ. சோதனைக்கு அம்ருதா தயாராக இருப்பதாக நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு அரசு தரப்பு ஆட்சேபணை தெரிவித்தது. இந்த வழக்கில் தமிழக தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபா ஆகியோரை சேர்க்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். தீபக் கடந்த வாரம் பதில் மனு தாக்கல் செய்தார். இதனிடையே, தன்னையும் இந்த வழக்கில் இணைத்துக் கொள்ளக்கோரி கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி பிப்ரவரி 19ம் தேதி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், இந்த வழக்கில் ஜெ.தீபா நேற்று பதில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், ஜெயலலிதாவின் சொத்துகளை கைப்பற்றவே அம்ருதா பொய்யான வழக்கு தொடர்ந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அம்ருதா தரப்பில் மூத்த வக்கீல் வி.பிரகாஷ், தீபா சார்பில் வக்கீல்கள் சாய் குமரன், தொண்டன் சுப்பிரமணி ஆகியோர் ஆஜராகினர்.
அம்ருதா தரப்பு மூத்த வக்கீல் வாதிடும்போது, டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டும் என்பதுதான் எங்களது கோரிக்கை என்று நீதிபதியிடம் தெரிவித்தார்.

அதற்கு நீதிபதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மாண்பை குறைக்கும் வகையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அதேநேரத்தில், ஜெயலலிதா, அம்ருதா ஆகியோரின் டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த டிஎன்ஏ பரிசோதனைக்காக ஜெயலலிதாவின் உயிரி மாதிரிகள் உள்ளதா என்பது குறித்து ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்போலோ மருத்துவமனை தெரிவிக்க வேண்டும். இந்த வழக்கில் அப்போலோ மருத்துவமனை பதில் மனுதாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. வழக்கு விசாரணை வரும் 7ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார். மேலும், புகழேந்தி மனுவை விசாரணைக்கு எடுப்பது குறித்து மனுதாரரும், தீபா, தீபக் தரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

பத்திரிகை செய்தி வருவதற்கு எதிர்ப்பு

வழக்கு விசாரணையின்போது அம்ருதாவின் வக்கீல் பிரகாஷ் நீதிபதியிடம், இந்த வழக்கு ஒரு குடும்பம் சார்ந்த தனிப்பட்ட வழக்கு. இந்த வழக்கு விசாரணை குறித்து பத்திரிகைகளில் செய்தி வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றார். அதற்கு நீதிபதி, பத்திரிகை சுதந்திரத்தில் நீதிமன்றம் தலையிடாது. நீதிமன்ற விசாரணையையும், நீதிபதியின் உத்தரவையும் மட்டுமே அவர்கள் வெளியிடுகிறார்கள். இதில் எப்படி தலையிட முடியும் என்றார். அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் நீதிபதியிடம், இது பொதுநலன் உள்ள வழக்கு என்றார். இதையடுத்து, இந்த வழக்கு குறித்து பத்திரிகை செய்தி வெளியிடுவதில் தலையிட முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top