டி.டி.வி.தினகரனின் தங்கை, கணவருடன் சி.பி.ஐ. கோர்ட்டில் சரணடைய வேண்டும்.

சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் டி.டி.வி.தினகரனின் தங்கை சீதளாதேவியும், அவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரனும் 2 வாரத்தில் சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகளும், டி.டி.வி.தினகரனின் தங்கையுமான சீதளாதேவியின் கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன் சென்னை ரிசர்வ் வங்கியின் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
எஸ்.ஆர்.பாஸ்கரனும், அவரது மனைவி சீதளாதேவியும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 1997-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு எஸ்.ஆர்.பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 லட்சம் அபராதமும், சீதளாதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து 2008-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஆர்.பாஸ்கரன், சீதளாதேவி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தது.
இதை எதிர்த்து எஸ்.ஆர்.பாஸ்கரன், சீதளாதேவி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவின் மீதான விசாரணை நீதிபதி சந்தனகவுடர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. மனுவை பரிசீலித்த நீதிபதி, 2 பேரும் 2 வார காலத்துக்குள் சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.