தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் கொள்கை ரீதியாக இணைய வேண்டும்! – முதலமைச்சர்

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கொள்கை ரீதியாக இணைந்து செயற்படக் கூடிய கட்சிகள் இணையவேண்டும். அது தமிழ் மக்களுக்கு நிச்சயமாக நன்மை பயப்பதாக இருக்கும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் இயங்கும் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பில் இன்றைய தினம் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“ தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள சகல கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என முன்னரும் பல தடவைகள் நான் கூறியிருக்கின்றேன். அந்தக் கருத்து இப்போது பலராலும் வலியுறுத்தப்பட்டு கொண்டிருக்கின்றது. தேசியத்துடன் சம்மந்தப்பட்ட சகல கட்சிகளும் எழுத்து மூலமாக வெளியிடும் ஆவணங்கள் அல்லது தேர்தல் விஞ்ஞாபனங்களில் கொள்கை ரீதியான ஒன்றுமை உள்ளது.
ஆனால் தனிப்பட்ட முறையில் அவர்களுடைய அரசியல் செயற்பாடுகளில் கொள்கை ரீதியான வேறுபாடுகள் காணப்படுகின்றன. உள்ளூராட்சி சபைகளில் கட்சிகள் இணைவது அல்லது பிரிவது இப்போது ஒன்றும் கூற இயலாது. காரணம் இறுதியாக அவர்கள் என்ன அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்போகிறார்கள் என்பது எமக்குத் தெரியாது.
ஆனால் எப்பாடு பட்டேனும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதை மட்டும் இலக்காக கொண்டவர்கள் எவருடைய காலைப் பிடித்தாவது ஆட்சியமைத்து விடுவார்கள். அவர்கள் கட்சியை பற்றியோ, கொள்கையை பற்றியோ சிந்திக்க மாட்டார்கள். ஆனால் அந்த நிலைப்பாடு அவர்களுக்கு உடனடிப் பாதிப்பைக் கொடுக்காமல் விடலாம். ஆனால் நீண்ட காலப்போக்கில் நிச்சயமாக அது பாதிப்பைக் கொடுக்கும். இதற்கு நல்லாட்சி அரசாங்கம் சிறந்த உதாரணம்.
தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் கொள்கை ரீதியாக இணைய முடியுமாக இருந்தால் மட்டுமே இணையவேண்டும். அவ்வாறு ஒன்றிணைந்தால் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என குறிப்பிட்டுள்ளார்.