தமிழ் மக்கள் கூட்டமைப்பிற்கு வாக்களித்தால் இதுதான் அர்த்தம்! சம்பந்தன்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை சர்வதேச நாடுகள் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தமிழ் மக்கள் மீது சர்வதேச சமூகம் கரிசனைகொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மூதூர் – இருதயபுரம் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதற்கு இலங்கை அரசாங்கம் இணைஅனுசரனை வழங்கியுள்ளது. இலங்கை அரசாங்கம் அந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு பலவிதமான அழுத்தங்களை எதிர்நோக்கியுள்ளது.
இந்த தேர்தல் முடிந்த பிறகு அந்த அழுத்தம் இன்னும் அதிகமாக இருக்கும். அதுவே இந்த தேர்தலின் முக்கியத்துவமாக இருக்கின்றது. தமிழ் மக்கள் எவ்வாறு வாக்களிக்கப் போகின்றார்கள் என்பதை சர்வதேச சமூகமும், இலங்கை அரசாங்கமும் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்கள், இலங்கை தமிழரசு கட்சிக்கு வாக்களித்தால், வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்தால் அதன் அர்த்தம் தமிழ் மக்கள் அந்த கட்சிக்கும், அதன் கொள்கைக்கும் பின்னால் இருக்கின்றார்கள் என்பதாகும். எனவே, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து எங்களது கொள்கைக்கு தமிழ் மக்கள் ஆதரவு தரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.<