தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மகள் .

ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசைனின் மூத்த மகள் ராகத் என்பவரை தேடப்படும் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்து அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஈராக் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ராகத், சட்டரீதியான நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார்.
ஐ.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்களுடன் தொடர்பில் இருக்கும், அந்த தீவிரவாத அமைப்புகளுக்கு உதவி வரும், ஆதரவு அளித்து வரும் 60 பேரை தேடப்படும் குற்றவாளியாக நேற்றுமுன்தினம் ஈராக் அரசு அறிவித்தது. அவர்களின் பெயர் பட்டியலையும், புகைப்படத்தையும் வெளியிட்டது.
குறித்த பட்டியலில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் என சந்தேகப்படும் 28 பேர், அல்காய்தா அமைப்பைச் சேர்ந்த 12 பேர், பாத் கட்சியைச் சேர்ந்த 20 பேர் உள்ளனர். இதில் ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசைனின் மூத்த மகள் ராகத் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பேசிய ராகத், என்னுடைய பெயரை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ஈராக் அரசு இதுபோன்ற செயலில் ஈடுபடுகிறது.
இது தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கை எடுப்பேன். எனக்கும் எந்த அமைப்புகளுக்கும் தொடர்பு இல்லை என்றார். மட்டுமின்றி ஐஎஸ். தீவிரவாத அமைப்பின் முக்கியத் தலைவர் அபுபக்கர் அல்பா க்தாதியின் பெயர் இந்த பட்டியலி்ல் இல்லை என்பது வியப்பாக இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது ராகத் ஜோர்டான் நாட்டில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.