பஸ்ஸில் கைக்குண்டு வெடிப்பு; 12 இராணுவம் உட்பட 19 பேர் காயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து தியதலாவ சென்ற தனியார் பஸ் வண்டியொன்றில் திடீரென ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்துடனான தீ விபத்தில் 19 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைக்குண்டு ஒன்று வெடித்ததன் மூலம் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், குறித்த சம்பவம், பயங்கரவாத நடவடிக்கை அல்ல என இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளதோடு, இன்று (21) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரும் அதனை உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
பயணிகள் அல்லது இராணுவத்தினரின் பயணப் பையில் இருந்த குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்திருக்கலாம் என அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (21) காலை 5.45 மணியளவில், தியதலாவை, கஹகொல்ல பிரதேசத்தில் வைத்து, இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமுற்ற பயணிகளில், 07 இராணுவ வீரர்கள் மற்றும் 05 விமானப்படை வீரர்கள் உள்ளிட்ட 12 படை வீரர்கள் உள்ளடங்குவதாக இராணுவ ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காயமடைந்த பயணிகள், மருத்துவ சிகிச்சைக்காக தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் இரு இராணுவ வீரர்களின் நிலை மோசமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, குறித்த தனியார் பஸ்ஸில் பயணம் செய்த ஏனைய பயணிகள், மற்றுமொரு தனியார் பஸ்ஸின் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.