புயலால் பவர் கட்: தங்கச் சுரங்கத்திற்குள் சிக்கித் தவித்த 950 தொழிலாளர்கள் 2 நாட்களுக்கு பிறகு மீட்பு

தென் ஆப்பிரிக்காவில் புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் தங்கச் சுரங்கத்தில் சிக்கித் தவித்த 950 தொழிலாளர்கள் 2 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டனர்.
:தென் ஆப்பிரிக்காவின் வெல்கோம் நகரின் அருகே உள்ள சிறிய நகரமான தெனிசென் நகரில் பீட்ரிக்ஸ் தங்கச் சுரங்கம் உள்ளது. 23 நிலைகளைக் கொண்ட இந்த சுரங்கம் தரைமட்டத்தில் இருந்து 1000 மீட்டர் ஆழத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிகின்றனர். இந்த சுரங்கத்தில் புதன்கிழமை மாலை திடீரென மின்சாரம் தடைபட்டது.
புயல் காரணமாக மின் கம்பங்கள் சேதமடைந்ததால், உடனடியாக மின் இணைப்பு கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. சுரங்கத்திற்குள் இருந்து வெளியே தொழிலாளர்களை அழைத்து வரக்கூடிய லிப்டுகள் எதுவும் செயல்படவில்லை. இரவுப் பணிக்குச் சென்ற தொழிலாளர்கள் 950 பேரும் உள்ளே சிக்கித் தவித்தனர். ஜெனரேட்டர்கள் மூலம் இயங்கும் லிப்ட்டை பயன்படுத்தி சுமார் 300 தொழிலாளர்கள் வெளியே கொண்டு வரப்பட்டனர்.
தொழிலாளர்கள் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அனைவரும் சுரங்கத்தின் அருகில் திரண்டனர். அவர்களை சுரங்க வாயில் அருகே செல்ல வேண்டாம் என பாதுகாவலர்கள் அறிவுறுத்தினர். தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மீட்பு பணிகள் ஒருபுறம் முழுவீச்சில் நடைபெற்று வந்த நிலையில், இன்று காலை மின் இணைப்பும் கொடுக்கப்பட்டது. இதையடுத்து மீதமுள்ள தொழிலாளர்கள் லிப்ட் மூலம் மேல்தளத்திற்கு வந்து சேர்ந்தனர். அதன்பின்னரே தொழிலாளர்களின் குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.
இது அதிர்ச்சிகரமான அனுபவம் என்று கூறிய சுரங்க நிர்வாகம், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளது.