News

பெர்லினில் மசூதி மூடல்: பொலிசார் நடவடிக்கை

ஜேர்மனியில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் பெர்லினிலுள்ள மசூதி மூடப்பட்டுள்ளது. துனிஷியாவில் பிறந்த Anis Amri 2016ம் ஆண்டு பெர்லின் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். இதனை தொடர்ந்து ஜேர்மன் பொலிசார் பல தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெர்லினில் உள்ள 24 இடங்களில் 400க்கும் மேற்பட்ட பொலிஸார் ரெய்டில் ஈடுபட்டனர். ரெய்டை அடுத்து பெர்லினில் உள்ள மசூதி மூடப்பட்டது, “Fussilet 33” எனும் அமைப்பு இங்கு இயங்கி வந்ததும் தெரியவந்துள்ளது. 2015 முதல் இந்த மசூதி ஐஎஸ் தீவிரவாதக் குழுவுக்கு ஆட்களை சேர்ப்பதாக சந்தேகிக்கப்பட்டதால் கண்காணிக்கப்பட்டது.

பெர்லின் கிறிஸ்துமஸ் மார்க்கெட் தாக்குதல்தாரி Anis Amriயும் குறித்த மசூதிக்கு சென்று வந்துள்ளார். கடந்த வாரம் IS தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மூன்று பேர் ரெய்டு ஒன்றின்போது கைது செய்யப்பட்டனர், அந்த மூவரும் கூட இந்த மசூதிக்கு அடிக்கடி வந்துள்ளனர். எனவே மசூதி மூடப்பட்டுள்ளது.

இதற்கிடையே தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக சந்தேகிக்கப்படும் குடியுரிமை மறுக்கப்பட்ட வெளிநாட்டவர்களை கைது செய்து காவலில் வைக்க சட்டமியற்றுதல் போன்ற நடவடிக்கைகளும் பரிசீலனையில் உள்ளன. உள்துறை அமைச்சர் Thomas de Maiziereஇன் கூற்றுப்படி, ஜேர்மனியில் வசிக்கும் 500க்கும் அதிகமானோர் ஜேர்மனிக்கு பலத்த ஆபத்து விளைவிக்கக் கூடியவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் தோராயமாக பாதி பேர் ஜேர்மானியரல்லாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top