News

பேச அழைத்து மகிந்த மிரட்டினார்! சம்பந்தன்!

2011ம் ஆண்டு பேச்சுக்கு என்னைத் தனது மாளிகைக்கு அழைத்து மிரட்டும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நடந்து கொண்டார். அவர் மட்டுமல்ல, அங்கிருந்தவர்கள் எல்லோரும் என்னைப் பயமுறுத்தும் வகையிலேயே செயற்பட்டார்கள். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் பரபரப்புக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

திருகோணமலையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். பேச்சுக்கு கூட்டமைப்பை அழைத்த போதும் கூட்டமைப்பு பேச்சுக்கு வரவில்லை என்று மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் வைத்துத் தெரிவித்திருந்தார். அதற்குப் பதில் வழங்கியுள்ள கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது-, இது தொடர்பில் மக்கள் உண்மையை அறிந்து கொள்ள வேண்டும். 2009ஆம் ஆண்டு போர் முடிந்த சில நாட்களின் பின்னர் ஐ.நா. பொதுச் செயலர் இலங்கைக்கு வந்தார். ஐ.நா. பொதுச் செயலருக்கு மகிந்த வாக்குறுதிகளை வழங்கினார்.பொறுப்புக் கூறல் சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும், அரசியல் தீர்வு ஏற்படுத்தப்பட்டு அது நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தார்.

அவை நிறைவேற்றப்படாத காரணத்தால் இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் அதை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தார்கள். மகிந்த ராஜபக்ச இந்தியாவுக்கு அழைக்கப்பட்டு, இந்திய பிரதமர் மன்மோகன் சிங் இது தொடர்பில் பேசியிருந்தார். அமெரிக்காவின் இராஜாங்க உதவிச் செயலர் ரொபேர்ட் ஓ பிளேக் இலங்கைக்கு இந்தக் காலத்தில் வந்திருந்தார். அவர் என்னைச் சந்திக்க வேண்டும் என்றார். ஒரு நாள் காலையில் சந்தித்தேன். அப்போது பிளேக் கூறினார், சம்பந்தன் உங்களுடைய ஜனாதிபதி (மகிந்த) ஒரு நாளும் மாற மாட்டார். அவரை நான் நேற்றுப் பின்னேரம் சந்தித்தேன். பழைய பாணியில் தான் பேசுகின்றார். அவர் மாறுவார் என்று நான் நினைக்கவில்லை என்று ரொபேர்ட் ஓ பிளேக் கூறினார்.

நான் பிளேக்குடன் பல விடயங்கள் சம்பந்தமாகப் பேசினேன். எமது நிலைப்பாட்டை அவருக்குத் தெளிவாகக் கூறினேன். சந்திப்பை முடித்துக்குக் கொண்டு வந்தேன். அன்று மாலை அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மகிந்த என்னை அலைபேசியில் அழைத்தார். சம்பந்தன் இன்று நீங்கள் பிளேக்கைச் சந்தித்தாகக் கேள்விப்படுகின்றேன். என்ன பேசினீர்கள் என்று கேட்டார். பேச வேண்டிய எல்லா விடயங்களையும் பேசினேன் என்று கூறினேன். அதன் பின்னர் மகிந்த, அவரை (பிளேக்கை) நான் நேற்றுச் சந்தித்தேன். அரசியல் தீர்வு சம்பந்தமாகப் பேசினார். அப்போது நான் பிளேக்கிடம் கூறினேன், அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்களில் உங்களின் உதவி தேவையில்லை. அதனை எங்களுக்கு கண்டுகொள்ளத் தெரியும் என்று பிளேக்கிடம் தெரிவித்ததாக என்னிடம் சொன்னார்.

அந்தக் காலத்தில்தான் அமெரிக்கா ஒரு முடிவு எடுக்க ஆரம்பித்தது. மகிந்த தரப்புக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தது.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top