போர்க்குற்றங்களை மறந்து விடுங்கள்! – ஆளுனர்

போரின் போது இடம்பெற்ற குற்றங்களை அனைவரும் மறந்து விட வேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே வலியுறுத்தினார். அத்துடன், நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை. நடந்த்தையே நினைத்திருந்தால் அமைதி வருவதில்லை என்ற கண்ணதாசனின் பாடல் வரிகளையும் அவர் நினைவுபடுத்தியுள்ளார்.
அநுராதபுரதம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவரின் வழக்கு விசாரணைகள் அநுராதபுரம் மேல் நீதிமன்றிலிருந்து வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்றப்படுவதாக சட்டமா அதிபர் திணைக்களத்தால் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு நேற்று அறிவிக்கப்பட்டது. அரசியல் கைதிகளின் உறவினர்களால் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட எழுத்தாணை மனுவை அடுத்தே இந்த தீர்மானத்தை சட்டமா அதிபர் அறிவித்தார்.
இந்த நிலையில் அரசியல் கைதிகள் மூவரது உறவினர்களும் இன்று வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேயை யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்தனர். ஆளுநருக்கும் ஜனாதிபதிக்கும் இதன்போது அவர்கள் நன்றி தெரிவித்தனர். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துவெளியிட்ட போதே வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது: ‘போராட்டம் நடத்திய காரணத்தால் நானும் மறியலில் இருந்தேன். தற்போது போராட்டங்கள் மற்றும் போர் என்பன முடிந்துவிட்டன. அந்தக் காலத்தில் நடைபெற்றவைகளை எல்லாம் நாம் மறக்கவேண்டும். அவற்றை நெஞ்சில் வைத்துக் கொண்டு கோபத்தில் செய்பவைகளால் எந்தப் பயனுமில்லை.
இந்த நாட்டில் இடம்பெற்ற போரால் சிங்கள மக்களும் தமிழ் மக்களும் மிகவும் வேதனையடைந்தனர். இப்போது எல்லா மக்களும் ஒரு தாய் பிள்ளைகளாக இந்த தேசத்துக்கு விடுதலை கொண்டு வரவேண்டும். இந்த நாடு சுதந்திரமடைந்த பின்னர் 70 ஆண்டுகள் என்ன நடந்தது? முஸ்லிம் தலைவர்கள் அரசுடன் இணைந்து தமது மக்களுக்காக வேலை செய்தனர். தமிழ் மக்கள் 70 ஆண்டுகள் அரசுக்கு எதிராக இருந்தனர்.
போராட்டம் செய்ய வேண்டாம் என நான் சொல்லவில்லை. அரசியல் நோக்கத்துக்கு அதனைச் செய்வோம். அதற்கு இடையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏதாவது இருந்தால் அவற்றை உடனடியாக நேரடியாகச் செய்யவேண்டும். அதுதான் மக்கள் பிரதிநிதிகளின் கடமையாகும் என்றார்.