மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு

மாலத்தீவில் அவசரநிலை பிரகடனம் மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திய பெருங்கடல் தீவு நாடான மாலத்தீவில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள எதிர்க்கட்சி தலைவர்களை விடுதலை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அப்துல்லா சயீத் அமர்வு உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து கடந்த 5–ந் தேதி நெருக்கடி நிலையை பிரகடனம் செய்து அதிபர் யாமீன் அப்துல் கயூம் உத்தரவிட்டார். மேலும், தலைமை நீதிபதி அப்துல்லா சயீத்தும், நீதிபதி அலி ஹமீத்தும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் அங்கு நெருக்கடி நிலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதற்கான ஒப்புதலை அந்த நாட்டின் பாராளுமன்றம் வழங்கியது. இது தொடர்பான ஓட்டெடுப்பை எதிர்க்கட்சி புறக்கணித்த நிலையில், ஆளும் கட்சியின் 38 எம்.பி.க்களும் ஆதரவாக ஓட்டு போட்டனர்.