Business

மைத்திரிபால சிறிசேனனாவால் சம்பந்தனின் பதவி பறித்தால் நடப்பது என்ன?

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில், பிரதமர் பதவி பறிபோகுமா? அமைச்சர்களின் பதவி மாறுமா? நாடாளுமன்றம் கலைக்கப்படுமா? எதிர்க் கட்சியில் மாற்றம் வருமா? என்றொல்லாம் பெரும் பரபரப்பான தகவல்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன தென்னிலங்கை ஊடகங்கள்.

ஒரே ஒரு தேர்தல் முடிவு இத்தனை குழப்பத்தையும் ஏற்படுத்தியிருக்கிறதா என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும். முன்னரே புகைந்து கொண்டிருந்த சிக்கல்கள் தேர்தல் முடிவுகளோடு பெரும் பூதாரகரமாக வெடித்திருக்கிறது என்பது தான் உண்மை. ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதில் மும்முரமாகச் செயற்பட்டதுதான் பெரும் சிக்கலுக்கு காரணமாகியிருந்து.

கடந்த 2015ம் ஆண்டு, மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி, புதிய அரசாங்கத்தை உருவாக்கும் போது, அதற்கு நல்லாட்சி என்று பெயர் சூட்டி, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களையும் இணைத்து அலங்கரித்து ஆட்சியை முன்னெடுத்தனர். மைத்திரிபால சிறிசேனவும், ரணில் விக்ரமசிங்கமும் இணைந்து சர்வதேச ரீதியாக இலங்கை மீது பின்னப்பட்டிருந்த வலைகள் அறுத்தெறியப்பட்டு, தடைகள் உடைக்கப்பட்டன.

இந்த ஆட்சியில் தான் சர்வதேச விசாரணை என்று இருந்த போர்க்குற்றச்சாட்டுக்கான, தமிழர்களுக்கான நீதி விசாரணையை உள்ளக விசாரணையாக மாற்றியது நல்லாட்சி அரசாங்கம். இன்னும் விரிவாகச் சொல்லப் போனால், இலங்கை இராணுவத்தினரையும், முன்னாள் ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சர், முப்படைகளின் தளபதி என்று என்று எல்லா அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்த மகிந்த ராஜபக்சவை காப்பாற்றியதும் ரணில் மைத்திரி அரசு தான்.

இருப்பினும், உள்நாட்டில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து பேசப்பட்டன. விசாரணைகள், சிறுசிறு கைதுகள் என்று பூச்சாண்டிகள் காட்டப்பட்டன. அது மகிந்த ராஜபக்சவை மிரட்டுவதற்கான கருவியல்ல. சர்வதேச சமூகத்தை நம்ப வைப்பதற்கான முயற்சியன்றி வேறு எதுவுமல்ல. சர்வதேச நாடுகளின் நம்பிக்கையை வென்று அதன் மூலம் இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வது தான் ஆரம்பகட்ட திட்டமாக இருந்தது. நிற்க, சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு ரணிலைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது அமெரிக்க இந்திய அரசுகளின் முக்கிய திட்டமாக இருந்தது. அது ஆட்சியேற்று ஓராண்டுக்குள் சரியாகத்தான் இருந்தது.

ஆனால், ஆட்சியைக் கொண்டு செல்வதற்கும், ஏற்கனவே வாங்கிய கடன்களை கட்டுவதற்கும் சீனா கொடுத்த நெருக்கடிகளை இலங்கையின் நல்லாட்சியால் தாங்கிக் கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலை உருவாகியிருந்தது. இந்நிலையில் தான் ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு 99 ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்டது. இவையெல்லாம் நல்லாட்சி என்று சொல்கின்ற, இன்றை அரசின் இயலாமைத் தன்மையை எடுத்துக் காட்டி நின்றது.

அமெரிக்காவும், சீனாவும் இந்த விடையத்தில் கடும் எதிர்ப்பில் இருந்தாலும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைக் கொண்டிருந்தது. கொண்டிருக்கிறது. எனினும், மூன்றாவது ஆண்டில் தான் பெரும் சிக்கலை கண்டு நிற்கிது அரசு. இந்தக் கட்சி ஆட்சி செய்வதா?அல்லது அந்தக் கட்சி ஆளுகின்றதா என்பது தான் அது. இதற்கு பெரும் சிக்கல் பிரதமர். அவரை விலக்க வேண்டும் என்றால் அவர் கட்சிக்காரரே அவரை எதிர்க்க வேண்டும்.

அது இப்பொழுது நடக்கிறது. காகம் இருக்க பனம் பழம் விழுந்த கதையாக வந்து நிற்கிறது விசையம். இதற்கிடையில், எதிர்க் கட்சி தலைவர் பதவியைப் பறித்து மகிந்த ராஜபக்சவிற்கு கொடுக்க வேண்டும் என்னும் கருத்து மேலோக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், அதனை மைத்திரிபால சிறிசேன செய்வதற்கு இப்போதைக்கு இடம் கொடுக்க மாட்டார் என்பதை உறுதியாக நம்பலாம்.

அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைக்கான கூட்டத் தொடர் வருகிறது. இலங்கை சிறுபான்மை மக்களுக்கு பாரபட்சம் காட்டவில்லை. தமிழ் மக்களின் கட்சியையும், அவர்கள் தேர்வு செய்திருக்கும் தலைவரையும் நாங்கள் எதிர் கட்சியாக வைத்திருக்கிறோம் என்று காட்ட வேண்டிய தேவையிருக்கிறது.

இப்போதைக்கு மைத்திரிபால சிறிசேன சர்வதேசத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறார். குறிப்பாக போர்க் குற்ற விசாரணை தொடர்பில் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. கொடுக்கப்பட்ட கால அவகாசமும் முடிவடைகிறது. அதேபோன்று அரசியல் தீர்வு குறித்து பேசுவது, அரசியல் கைதிகள் விடுதலை, காணிகள் விடுவிப்பு போன்று பல தரப்பட்ட விடையங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கிறார்.

ஆக, ரணில் விக்ரமசிங்க பதவியில் இருந்து நீக்கப்பட்டாலும் மைத்திரிபாலவிற்கு அவ்வளவு தாக்கம் வரப்போவதில்லை. ஆனால். எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனின் பதவியை பறித்தால் அது மைத்திரிக்கு மற்றொரு பக்கத்தில் சிக்கலைக் கொண்டுவந்து தாக்கும். இப்போதைக்கு சம்பந்தன் மைத்திரிக்கு முக்கியமான இடத்தில் இருக்கிறார். அதனால் சம்பந்தனின் பதவிக்கு எந்தவிதமான ஆபத்தும் இருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதியாக நம்பலாம். ஆனால், இந்த வாய்ப்பை கூட்டமைப்பினர் எவ்வாறு கையாளுவார்கள் என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top