India

மௌன விரத நாடகம் ஆடும் சசிகலாவுக்கு கிடுக்கிப்பிடி!

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும், சசிகலாவை விசாரிப்பதற்காக, வருமான வரித்துறை, மீண்டும்,அழைப்பாணை அனுப்ப முடிவு செய்துள்ளது. பெங்களூரு சென்று, நேரடி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும், பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துகளை, சசிகலா குடும்பத்தினர் குவித்துள்ளனர். போலி கம்பெனி பரிவர்த்தனை, சினிமா, மதுபான விற்பனை என, அவர்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை எனும் அளவுக்கு, சசி குடும்பம் வேரூன்றி விட்டது. அவை குறித்த ஆதாரங்கள் கிடைத்ததால், 2017, நவ., 9ல், சசிகலா உறவினர்களின் வீடு, அலுவலகங்கள், மிடாஸ் மதுபான ஆலை, ஜெயா, ‘டிவி’ மற்றும் நமது எம்.ஜி.ஆர்., நாளிதழ் என, சென்னையில், 100க்கும் மேற்பட்ட இடங்கள் உட்பட, 215 இடங்களில் சோதனை நடந்தது.

பின், ஜெயலலிதாவின் வீட்டில், சசிகலா வசித்த அறைகளில் சோதனை நடத்தி, சொத்து தொடர்பான ஆவணங்கள், குட்கா வழக்கில், ஜெ.,வுக்கு, டி.ஜி.பி., எழுதிய இரகசிய கடிதம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுவரை, 5,000 கோடி ரூபாய்க்கு மேல், சசிகலா கும்பல், கணக்கில் காட்டாத சொத்துகள் வாங்கி குவித்துள்ளதும், வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பதும், ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இன்னும் பல ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டிய நிலையில், வருமான வரித்துறை உள்ளது.

முக்கியமாக, சசிகலா, அவரது சகோதரர் திவாகரனிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இருவரும் தொடர்ந்து, ‘டிமிக்கி’ கொடுத்து வருகின்றனர். திவாகரன், தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், சசிகலாவோ, மௌன விரதம் இருப்பதாகவும் கூறுகின்றனர். எனினும், இவ்வழக்கில் முக்கிய துருப்புச் சீட்டான சசிகலாவை விசாரணை செய்ய, வருமான வரித்துறையினர் தீவிரம் காட்டுகின்றனர்.

இது தொடர்பாக, தமிழக வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள், நேற்று கூறியதாவது: சசிகலா கும்பலின் வரி ஏய்ப்பு தொடர்பாக, பலரிடம் விசாரணை நடத்தி வருகிறோம். சசிகலா, யாரையும் நம்பாமல், பல முக்கிய சொத்து விஷயங்களை தானே கையாண்டுள்ளார். அவர்கள் குடும்பத்தில், யாரை விசாரித்தாலும், பல முக்கிய தகவல்களுக்கு, சசிகலாவையே கைகாட்டுகின்றனர்.

அதனால், அவரை விசாரிக்க, அழைப்பாணை அனுப்பியிருந்தோம். அதற்கு, பெப்., 10 வரை, மௌன விரதம் இருப்பதாக கடிதம் எழுதி, சிறை அதிகாரிகள் மூலம், சசிகலா அனுப்பியிருந்தார். அதுவரை, பொறுமை காக்க முடிவு செய்தோம். தற்போது, பெப்., 10 நெருங்கி வருவதால், சசிகலாவுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப முடிவு செய்யப்பட்டது.ஓரிரு நாளில் அது, கர்நாடக சிறைக்கு அனுப்பப்படும். பின், சசிகலாவிடம் சிறையிலேயே விசாரணை நடத்தவுள்ளோம். அதற்கு, முன் அனுமதி தேவை இல்லை. தேவைப்பட்டால், சசியுடன் சிறையில் இருக்கும் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்துவோம். இவ்வாறு கூறினர்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top