ரணிலுக்கு முக்கிய உத்தரவுகளையிட்ட மைத்திரி!

நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது நிதி, கல்வி மற்றும் நெடுஞ்சாலை அபிவிருத்தி போன்ற துறைகளை தனது நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் விட்டுவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பணித்திருப்பதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன என்று கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பிரதமருடன் நடத்திய நீண்ட மந்திரலோசனையின் பின்னரே ஜனாதிபதி இப்படியான பணிப்பை விடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதேபோல் கடந்த காலங்களில் அமைச்சுக்களுக்கு முறையாக வருகை தராத, மக்கள் சந்திப்பு தினங்களில் அலுவலகம் வருகை தராத மற்றும் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்காமல் உரிய பிரதிபலன்களைக் காட்டாத அமைச்சர்களை பதவியில் இருந்து இறக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில் கடந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றியை பெற்றுத்தந்த கட்சியின் அமைப்பாளர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க அதன் தலைவரான பிரதமர் ரணில் தீர்மானித்துள்ளார் எனத் தெரிகிறது. எம்.பிக்களான சுஜீவ சேனசிங்க, அங்கஜன் இராமநாதன் மற்றும் பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்புக்கள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு இம்முறை கூடுதல் ஆதரவு கிடைத்து உள்ளூராட்சி சபைகளுக்கு அதிக உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதால் யாழ். குடாநாட்டுக்கு தனது கட்சிக்கு அமைச்சுப் பதவி கிடைக்க வேண்டுமென பிரதமரிடம் ஜனாதிபதி சிபாரிசு செய்திருப்பதாக மேலும் தெரியவந்திருக்கிறது.