News

ரணில் சொல்வதை நாம் செய்ய விடமாட்டோம்! சிறீதரன் ஆவேசம் .

ரணில் சொல்வதைப் போன்று வடக்கில் பௌத்த விகாரைகளை அமைத்து பௌத்த சிங்கள மயமாக்க முடியுமா? நாங்கள் ஒன்றும் கை கட்டி வேடிக்கைப் பார்ப்பவர்கள் அல்ல. அவற்றை செய்வதற்கு இடமளிக்க மாட்டோம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சிச் சபைக்கான தேர்தல் இறுதிப் பிரசார மாபெரும் பொதுக்கூட்டம் கரைச்சிப் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் வ.நகுலேஸ்வரன் தலைமையில் கிளிநொச்சி பொதுச் சந்தை வளாகத்தில் நேற்று மாலை ஆரம்பமாகி நடைபெற்றது. அந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் தமிழினத்தின் விடுதலையை அரசியல் வழியில் வென்றெடுப்பதற்காக போராடி வருகின்ற அதேவேளை எமது மக்களின் அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.

எமது இனத்தின் விடுதலையே எமது பிரதான இலக்கு. அதை நோக்கித்தான் நாம் செயற்பட்டு வருகின்றோம்.எமது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய நாம் எமது மக்களுக்கான தேவை கருதி பல அபிவிருத்தித் திட்டங்களை அரசிடம் முன்வைத்துள்ளோம். அதற்கமைவாக சில அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெற்றுள்ளன. நடைபெறவுள்ளன. நாம் எமது மக்களுக்காகச் சேவையாற்றவே பாராளுமன்றம் சென்றோம். மக்களின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியை நாம் மக்களுக்கான அபிவிருத்தி தேவையற்றது என்று சொல்லி மறுக்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிடம் இரண்டு கோடி இலஞ்சம் பெற்றுள்ளதாக தேர்தலில் வெல்வதற்காக பொய்ப்பரப்புரை செய்யப்பட்டு வருகின்றது. இதனைக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் தில் இருந்தால் அவர் மக்களுக்குச் சேவையாற்றும் உண்மையான மக்கள் பிரதிநிதியாகவிருந்தால் அவர் கூறியபடி நாம் இலஞ்சம் வாங்கியதை நிரூபிப்பாரா? இப்படியான பொய்ப் பரப்புரைகளை முன்னெடுத்து எமது மக்களைக் குழப்பி துரோகம் புரிய வேண்டாம்.

இந்த நாட்டின் சிங்கள பேரினவாத பௌத்த சிந்தனையின் அடிப்படையில் செயற்படுகின்ற அரசுகள் எமது இனத்தை அடக்கி அடிமைப்படுத்துவதற்குத்தான் காலங்காலமாகப் பல வழிகளில் முயன்றுள்ளன, முயல்கின்றன. தற்போதும் இலங்கையின் பிரதமராக இருக்கும் ரணில் விக்ரமசிங்க என்ன சொல்லி இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிங்கள மக்களிடம் வாக்குக் கேட்கிறார் தெரியுமா? எதிர்வரும் காலங்களில் இலங்கை முழுவதிலும் குறிப்பாக வடக்குக்கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பௌத்த விகாரைகளை அமைக்கப் போகின்றாராம்.

கிளிநொச்சியிலும் நூற்றுக்கணக்கான விகாரைகளை அமைக்கப்போகின்றாராம். அவர் நினைத்தபடி அவர் கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கான பௌத்த விகாரைகளை அமைக்க நாம் என்ன கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பவர்கள் என்றா ரணில் நினைக்கிறார்? அவர் நினைப்பது போல் எமது தாயகப் பகுதிகளில் பௌத்த விகாரைகளை அமைத்து பௌத்த சிங்கள மயமாக்க முடியுமா? எமது பிரதேச சபைகள் அதற்கு அனுமதிக்குமா? அவர் அப்படிச் செய்வதை நாம் என்ன கைகட்டி வேடிக்கை பார்க்கும் கோழைகளா? நாம் தன்மானத் தமிழர்கள்! எமக்கென்றொரு வீரவரலாறு உண்டு. தனித்துவமுண்டு இது அவர்களுக்கும் தெரியும் இந்த மண்ணிலே செய்யப்பட்ட தியாகங்கள் எவையும் வீண்போய்விடாது. எமது இனத்திற்கான விடுதலை கிடைக்கும் வரை தமிழ் மக்களின் பலத்துடன் நாம் எமது இலக்கு நோக்கிப் பயணிப்போம் என்றார்.

Latest News

Copyright © 2015 EETTV.COM.

To Top